'பள்ளியில் படிக்கும் மாணவர்களை வெளியேற்றவே விஸ்வகர்மா திட்டம்'
'பள்ளியில் படிக்கும் மாணவர்களை வெளியேற்றவே விஸ்வகர்மா திட்டம்'
ADDED : டிச 09, 2024 04:21 AM

சென்னை : ''பள்ளியில் படிக்கும் மாணவர்களை வெளியேற்றவே, 'விஸ்வகர்மா' திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது,'' என, துணை முதல்வர் உதயநிதி கூறினார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி., பள்ளியில், 1974ல் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று பேசியதாவது: பொதுவாக குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு தான், பெற்றோரை பள்ளி நிர்வாகத்தினர் அழைப்பர். என் அப்பா படித்த இந்தப் பள்ளிக்கு, மகனான என்னை அழைத்து கோரிக்கை வைத்துள்ளனர். இது, வினோதமாக உள்ளது. முதல்வரே உங்கள் பள்ளியில் படித்துள்ளார்.
அதனால், பள்ளிக்கு வேண்டியதை அவர் செய்வார். முதல்வர் ஸ்டாலினின் பல்வேறு பேச்சுகள் எனக்கு பிடித்தமானவை. அவற்றில் ஒன்று, 2020ல் இந்தப் பள்ளியில் அவர் பங்கேற்று பேசிய பேச்சு.இந்த பள்ளியில் தான், 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' என்ற அமைப்பை ஸ்டாலின் துவக்கினார். அதை பார்த்து தான், விளையாட்டுத் துறைக்கு, 'சாம்பியன்ஸ் பவுண்டேஷன்' என்ற அமைப்பை நான் துவக்கினேன்.
நாம் பல்வேறு திட்டங்களின் வாயிலாக, மாணவர்களை படிக்க பள்ளிகளுக்கு அனுப்புகிறோம். ஆனால், படிக்கும் மாணவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்றும் பணியை மத்திய அரசு செய்கிறது.
அதற்காக, 'விஸ்வகர்மா' என்ற பெயரில் மீண்டும் குலக்கல்வி திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. எனவே தான், அந்த திட்டத்தை எக்காலத்திலும் தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் என்கிறார் முதல்வர் ஸ்டாலின். இவ்வாறு அவர் பேசினார்.