'பொது தகவல் அலுவலருக்கு சாதகமாக செயல்படுகிறார் ஆணையர்' தன்னார்வலர் புகார்
'பொது தகவல் அலுவலருக்கு சாதகமாக செயல்படுகிறார் ஆணையர்' தன்னார்வலர் புகார்
ADDED : ஜன 22, 2025 12:39 AM
சென்னை:குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் அளிக்காத பொது தகவல் அலுவலர்களை காப்பாற்றும் வகையில், மாநில தகவல் ஆணையர்கள் சட்ட விரோதமாக செயல்படுவதாக, கவர்னர், முதல்வருக்கு, தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் கடிதம் அனுப்பிஉள்ளனர்.
தகவல் அறியும் உரிமை சட்டப்படி பொதுமக்கள் கேட்கும் விபரங்களை, பொது தகவல் அலுவலர்கள் அளிக்க வேண்டும்.
சாதகமான வழக்குகள்
இதில் தகவல் அளிக்க மறுக்கும் அலுவலர்கள் மீது, மாநில தகவல் ஆணையத்தில், இரண்டாவது மேல்முறையீட்டு புகார்கள் அளிக்கப்படுகின்றன.
இந்த புகார்களை விசாரிக்கும்போது, பொது தகவல் அலுவலர்கள் மட்டுமல்லாது, மனுதாரரும் நேரில் ஆஜராக வேண்டும் என, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், சமீப காலமாக, மனுதாரருக்கு முறையாக அழைப்பு அனுப்பாமல், பொது தகவல் அலுவலர்களுக்கு சாதகமாக வழக்குகள் முடிக்கப்படுவதாக, புகார் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு, கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளமோடிவிளை கிராமத்தைச் சேர்ந்த தகவல் உரிமை ஆர்வலர் என்.பிரைட் புகார் கடிதம் அனுப்பி உள்ளார்.
சட்டப்படி பாதுகாப்பு
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மாநில தகவல் ஆணையத்தில் தற்போதுள்ள ஆணையர்கள், தகவல் அளிக்க மறுக்கும் பொது தகவல் அலுவலர்களுக்கு சாதகமாக செயல்படுகின்றனர்.
மேல்முறையீட்டு வழக்குகளில் பொது தகவல் அலுவலர்களுக்கு மட்டும், முறையாக தகவல் தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு உரிய அழைப்பு அனுப்பாமல், வழக்குகளை முடித்து வைக்கின்றனர்.
தகவல் உரிமை சட்ட அடிப்படையை சிதைக்கும் வகையில், ஆணையர்கள் செயல்படுகின்றனர். இந்த விஷயத்தில் சட்டப்படியான நடவடிக்கை எடுத்து, தகவல் ஆணையத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.