பொத்தான் பொத்துப்போகும் அளவுக்கு இரட்டை இலைக்கு ஓட்டு: விஜயபாஸ்கர்
பொத்தான் பொத்துப்போகும் அளவுக்கு இரட்டை இலைக்கு ஓட்டு: விஜயபாஸ்கர்
ADDED : ஜூலை 04, 2025 01:43 AM

திருச்சி: “வரும் 2026 சட்டசபை தேர்தலில் இரட்டை இலை சின்னம் பொருத்திய பட்டன் பொத்துப்போகும் அளவுக்கு மக்கள், அ.தி.மு.க.,க்கு ஓட்டளிக்கப் போகின்றனர்,” என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
தி.மு.க., ஆட்சி மற்றும் திருச்சி மாநகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் திருச்சி மரக்கடை பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் பங்கேற்று விஜயபாஸ்கர் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில் எந்த பிரச்னைகளை கூறினாலும், செவிடன் காதில் ஊதிய சங்காக உள்ளது.
திருமணத்தை பிரமாண்டமாக நடத்தி விட்டு, குடும்பம் நடத்தாதது போல், திருச்சி பஞ்சப்பூரில் பஸ் ஸ்டாண்டை திறந்து வைத்தும், பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
'தி.மு.க., ஆட்சியில் திருச்சி மக்களுக்கு பஸ் ஸ்டாண்ட் போன்ற புதிய கட்டமைப்புகளை உருவாக்கி விட்டோம்' என தேர்தல் பிரசாரத்தில் சொல்ல வேண்டும் என்பதற்காக, பஞ்சப்பூரில் பஸ் ஸ்டாண்ட் கட்டி திறந்தனர்.
ஆனால், அதை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் வைத்திருப்பது, ஆட்சி நிர்வாகம் கேவலமாக இருப்பதற்கு சாட்சி.
'தெருக்களிலும், டீக்கடைகளிலும் பேசப்படும் ஆட்சியின் அவலம், ஓட்டுச்சாவடிகளில் தான் முடியும்' என்று, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சொல்லி இருக்கிறார். தற்போதைய தி.மு.க., ஆட்சியை மனதில் வைத்துத்தான், அன்றைக்கே அவர் சொல்லி இருக்க வேண்டும்.
திருபுவனம் காவலாளி அஜித்குமார் லாக் அப் மரணத்துக்கு, அவருடைய பெற்றோருக்கு ஸாரி சொல்லி சமாளிக்கப் பார்க்கிறார், முதல்வர் ஸ்டாலின். ஸாரி சொல்லி விட்டால், போன உயிர் திரும்பி வருமா?
தமிழகத்தின் குடிமகனை அரசே கொலை செய்துள்ளது என, நீதிமன்றமே அரசை கண்டித்து உள்ளது.
வரும் 2026 தேர்தலில் அ.தி.மு.க., சின்னம் பொருத்திய பட்டன் பொத்துப்போகும் அளவுக்கு மக்கள், அ.தி.மு.க.,க்கு ஓட்டளிக்கப் போகின்றனர். அந்தளவுக்கு தி.மு.க., மீதான எதிர்ப்பு மக்களிடம் வலுத்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.