வைகை அணை நீர் வினியோகம்: அரசாணையை மறு ஆய்வு செய்க: உயர்நீதிமன்றம் உத்தரவு
வைகை அணை நீர் வினியோகம்: அரசாணையை மறு ஆய்வு செய்க: உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : மார் 12, 2024 06:39 AM
மதுரை : ஒரு போகம், இரு போகத்திற்கு பெரியாறு, திருமங்கலம் கால்வாய்கள் மூலம் ஒரே நேரத்தில் சீராக வைகை அணை நீரை வினியோகிக்க தாக்கலான வழக்கில், 'தற்போதைய குடிநீர் தேவை, பாசனத்திற்குரிய தண்ணீர் தேவை, சாகுபடி பரப்பளவை கருத்தில் கொண்டு 2010 ல் பிறப்பித்த அரசாணையை தமிழக அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
உசிலம்பட்டி அருகே மேலப்பட்டி சேவியர், மதுரை விராட்டிபத்து அருள் நவரத்தினம் 2023 டிசம்பரில் தாக்கல் செய்த பொதுநல மனு:
பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதிக்குட்பட்ட இருபோகம் 45 ஆயிரத்து 41 ஏக்கர் விவசாயத்திற்கு நவ.,10 முதல் 120 நாட்களுக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு நவ.,9 ல் உத்தரவிட்டது. திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு 230 கனஅடி வீதம் ஆண்டுதோறும் செப்.,15 முதல் மார்ச் 1 வரை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என 2010ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அணையில் போதிய தண்ணீர் உள்ளது. இருபோகத்திற்கு மட்டும் தண்ணீர் வினியோகிப்பது பாரபட்சமானது. ஒரு போக சாகுபடி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நவ.,9 ல் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
ஒருபோகம், இருபோகத்திற்கு பெரியாறு, திருமங்கலம் கால்வாய்கள் மூலம் ஒரே நேரத்தில் சீராக வைகை அணை நீரை வினியோகிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.
சேவியர், அருள் நவரத்தினம் தாக்கல் செய்த மற்றொரு மனு: பெரியாறு பிரதான கால்வாயின் ஒருபோக பாசனத்திற்கு 900 கன அடி, திருமங்கலம் பிரதான கால்வாய் ஒருபோக பாசனத்திற்கு 230 கன அடி வீதம் தண்ணீர் இருப்பு, நீர்வரத்தை பொறுத்து குடிநீருக்காக வைகை அணையிலிருந்து நவ.,15 முதல் 10 நாட்களுக்கு திறந்துவிட நவ.,14 ல் தமிழக அரசு உத்தரவிட்டது. இது 2010 ல் பிறப்பித்த அரசாணைக்கு முரணானது. 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். 2010 அரசாணைப்படி 2024 மார்ச் 1 வரை தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.ஏற்கனவே விசாரணையின்போது தமிழக அரசு தரப்பு: இது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது. இருபோக பாசனத்திற்கு அணையில் போதிய தண்ணீர் இல்லை. ஒருபோக பாசனத்திற்கே முழுமையாக தண்ணீர் வினியோகிக்க இயலவில்லை. அணையில் நீர் இருப்பு மற்றும் பருவமழையால் நீர்வரத்தை பொறுத்து இருபோக பாசனத்திற்கு நீர் வழங்குவது குறித்து தொழில்நுட்ப ரீதியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்வர். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் கோரும் நிவாரணத்திற்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்க இயலாது. மதுரை மாநகராட்சி மற்றும் அருகிலுள்ள பகுதிகளின் குடிநீர் தேவைக்கு வைகை அணை நீரை பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் பாசனத்திற்கு முழுமையாக தண்ணீர் வினியோகிப்பதில் நடைமுறைச் சிரமங்கள் உள்ளதாக அரசு தரப்பு கூறுகிறது. அதேசமயம் அணை நீரை நம்பியுள்ள பாரம்பரிய உரிமை பெற்றுள்ள விவசாயிகளின் எதிர்பார்ப்பை குறைகூற முடியாது. தற்போதைய குடிநீர் தேவை, பாசனத்திற்குரிய தண்ணீர் தேவை, சாகுபடி பரப்பளவை கருத்தில் கொண்டு 2010 ல் பிறப்பித்த அரசாணையை தமிழக அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

