10 ஆண்டுகளாக வரவு - செலவு சமர்ப்பிக்காத வக்ப் வாரியம்
10 ஆண்டுகளாக வரவு - செலவு சமர்ப்பிக்காத வக்ப் வாரியம்
ADDED : அக் 19, 2025 12:36 AM
சென்னை: 'தமிழ்நாடு வக்ப் வாரியம், 10 ஆண்டுகளாக, வரவு - செலவு கணக்குகளை, முழுமையாக தணிக்கைக்கு சமர்ப்பிக்கவில்லை' என்பது, இந்திய தணிக்கை தலைவரின் அறிக்கை வழியே தெரிய வந்துள்ளது.
அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள், அதன் வரவு - செலவு கணக்கு விபரங்களை, ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசின் தணிக்கை துறை தணிக்கைக்கு சமர்ப்பிக்க வேண்டும். 2023-24ம் ஆண்டுக்கான மாநில நிதி நிலை மீதான, மத்திய தணிக்கை அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில், தமிழகத்தில், 238 நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள், தங்களின் வரவு - செலவு கணக்குகளை சமர்ப்பிக்கவில்லை.
இதில், பல்வேறு நிறுவனங்கள், ஐந்தாண்டுகளுக்கு மேல், வரவு - செலவு கணக்குகளை சமர்ப்பிக்கவில்லை. அதிலும், சம்பளம், பராமரிப்பு போன்ற வற்றுக்காக, அரசின் நிதியுதவியை பெறும் கல்வி நிறுவனங்களே, அதிக அளவில் கணக்குகளை சமர்ப்பிக்கவில்லை.
கடந்த 2024 மார்ச் 31ம் தேதி வரை, 30.93 கோடி ரூபாய் மதிப்பில் கையாடல், குறைவு, களவு தொடர்பான, 397 நிகழ்வுகளுக்கு, தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளன. இதில், 21 ஆண்டுகளுக்கு மேல், 10.12 கோடி ரூபாய் மதிப்பிலான, 270 நிகழ்வுகளின் கணக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
குறிப்பாக, காரைக்குடி அழகப்பாக பல்கலை, சேலம் பெரியார் பல்கலை போன்றவை, 2018 - 19 முதல் 2023 - 24ம் நிதியாண்டு வரை; தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை, 2020 - 21 முதல் 2023 - 24 வரை; தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை, 2021 - 22 முதல் 2023 - 24ம் ஆண்டு வரை, தணிக்கைக்கு கணக்குகளை சமர்ப்பிக்கவில்லை.
அண்ணா, சென்னை, திருவள்ளூர் பல்கலை, 2022 - 23, 2023 - 24ம் ஆண்டுகளிலும், தமிழ்நாடு வக்ப் வாரியம், 2013 - 14 முதல் 2022 - 23ம் ஆண்டு வரையிலும், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம், 2008 - 09 முதல் 2022 - 23 வரையிலும், மாநில காச நோய் சங்கம், 2005 - 06 முதல் 2023 - 24ம் ஆண்டு வரையிலும் கணக்குகளை சமர்ப்பிக்காமல் நிலுவை வைத்துள்ளன என, இந்திய தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.