நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாக கல்லூரி கல்வி இயக்குனரக்கு 'வாரன்ட்!'
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாக கல்லூரி கல்வி இயக்குனரக்கு 'வாரன்ட்!'
UPDATED : நவ 12, 2025 11:44 PM
ADDED : நவ 12, 2025 11:40 PM

சென்னை: நீதிமன்ற உத்தரவை கடந்த மூன்றரை ஆண்டுகளாக அமல்படுத்த மறுத்ததோடு, நீதிமன்றத்திலும் ஆஜராகாமல் 'டிமிக்கி' கொடுத்து வந்த, தமிழக அரசின் கல்லுாரி கல்வி இயக்குநருக்கு, 'வாரன்ட்' பிறப்பித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் உள்ள நேசமணி நினைவு கிறிஸ்துவ கல்லுாரியில், இயற்பியல் துறையில் விரிவுரையாளராக, எல்.பத்மஜா என்பவர் நியமிக்கப்பட்டார்.
பதில் இல்லை
அதற்கு ஒப்புதல் வழங்கி, உரிய பணப் பலன்களை வழங்க வேண்டும் என, தமிழக கல்லுாரி கல்வி இயக்குநருக்கும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பதிவாளருக்கும், கடந்த 2022ம் ஆண்டு பிப்., 1ல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நீதிமன்றம் வழங்கிய நான்கு வார காலக்கெடுவுக்குள் உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி, மனுதாரர் பத்மஜா, கடந்த 2022 டிசம்பரில், உயர்கல்வித் துறை செயலர் கார்த்திகேயன், கல்லுாரி கல்வி இயக்குநர் எம்.ஈஸ்வரமூர்த்தி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பதிவாளர் ஜெ.சாக்ரடீஸ், கல்லுாரி தாளாளர்கள் டி.வினோத்குமார், பிரவீன் ஆகியோருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, பல முறை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டும், அதிகாரிகள் தரப்பில் உரிய பதிலளிக்கப்படவில்லை. இதையடுத்து, இந்த மனு குறித்து நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்கும்படி, கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி, கல்லுாரி கல்வி இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டது; அவர் நேரில் ஆஜராகவில்லை.
இந்த வழக்கு, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.சதீஷ்குமார் ஆஜரானார்.
அவகாசம்
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கி, உரிய பணப் பலன்களை வழங்கும்படி, கடந்த 2022ம் ஆண்டு பிப்., 1ல், இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உத்தரவை நிறைவேற்ற நான்கு வாரம் அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவை கடந்த மூன்றரை ஆண்டுகளாக அமல்படுத்தவில்லை.
மேலும், வழக்கில் நேரில் ஆஜராக உத்தரவிட்டும் ஆஜராகவில்லை; இது துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்லாமல், நீதிமன்ற அவமதிப்பு செய லும் கூட. எனவே, கல்லுாரி கல்வி இயக்குநரை, வரும் 21ம் தேதி நேரில் ஆஜர்படுத்தும் வகையில், ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பிக்கிறேன்.
பதிவுத்துறை
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுத்ததற்காக ஏன் தண்டிக்கக் கூடாது என்பது குறித்து, கல்லுாரி கல்வி இயக்குநர் விளக்கம் அளிக்க வேண்டும்.
அவருக்கு எதிராக பிறப்பித்த வாரன்டை செயல்படுத்த, அதிகாரி ஒருவரை நியமிக்கும் வகையில் இந்த உத்தரவு நகலை, சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு அனுப்பி வைக்க, உயர் நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிடுகிறேன். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையை வரும் 21க்கு தள்ளி வைத்தார்.

