முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு 105 கன அடியாக குறைப்பு லோயர்கேம்பில் மின் உற்பத்தி நிறுத்தம்
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு 105 கன அடியாக குறைப்பு லோயர்கேம்பில் மின் உற்பத்தி நிறுத்தம்
ADDED : மார் 18, 2024 01:37 AM
கூடலுார்: கேரள மாநிலம் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 105 கன அடியாக குறைக்கப்பட்டது.
இந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 118.35 அடியாக இருந்தது(மொத்த உயரம் 152 அடி). நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையின்றி கடும் வெப்பம் நிலவியதால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது. இந்நிலையில் தமிழக பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவை குறைக்க கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் வலியுறுத்தினர்.
மார்ச் 5ல் நீர் திறப்பு 800 கன அடியில் இருந்து 105 ஆக குறைக்கப்பட்டது. மீண்டும் மார்ச் 9ல் 1227 ஆக அதிகரிக்கப்பட்டது. நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது. ஜுனில் துவங்க உள்ள முதல் போக நெல் சாகுபடிக்கு பற்றாக்குறை ஏற்படும் என்பதால் மீண்டும் நீர் திறப்பை குறைக்க விவசாயிகள் மீண்டும் வலியுறுத்தினர்.
இதன் அடிப்படையில் படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்று 800 கன அடியில் இருந்து 105 கன அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 83 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 2330 மில்லியன் கன அடியாகும்.
நீர் திறப்பு 105 கன அடியாக குறைக்கப்பட்டதால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டது.
தற்போது குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீர் குமுளி மலை பாதையில் உள்ள இரைச்சல் பாலம் வழியாக வெளியேறுகிறது.
கண்காணிப்பு குழு ஆய்வு ஒத்திவைப்பு
முல்லைப் பெரியாறு அணையில் நடக்கும் பராமரிப்பு பணிகளை கண்காணிப்பதற்காக உச்சநீதிமன்றம் பரிந்துரையின்படி மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் விஜய்சரண் தலைமையில் கண்காணிப்பு குழு உள்ளது.
இக்குழுவில் தமிழக, கேரள அரசு சார்பில் தலா 2 உறுப்பினர்கள் உள்ளனர். ஆண்டுதோறும் அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அணையில் நடக்க வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து இக்குழு ஆலோசனைகளை வழங்கும். அதன்படி பணிகள் நடக்கும்.
2023 மார்ச் 27ல் இக்குழு அணைப் பகுதியில் ஆய்வு நடத்தியது. இந்நிலையில் இன்று ஆய்வு நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை தமிழக நீர்வளத் துறையினர் செய்திருந்தனர்.
ஆனால் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இன்று அணைப் பகுதியில் நடைபெற இருந்த ஆய்வு மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

