கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு; கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை
கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு; கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை
ADDED : டிச 14, 2024 07:47 PM

மயிலாடுதுறை: கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக காவிரி கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் மழை விட்டுள்ள போதிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
மழை நீர் வடிவதால் ஆறு வாய்க்கால்களின் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் அணைக்கரையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை கூடுதலாக 18 ஆயிரம் கண்ணாடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
மழை தொடர்ந்து பெய்தால் படிப்படியாக தண்ணீர் அளவு மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் மழை நீருடன், அணைக்கரையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் சேர்ந்து இன்று காலை நிலவரப்படி கொள்ளிடம் ஆற்றில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனஅடி தண்ணீர் சென்று பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே வங்கக் கடலில் கலக்கிறது.
இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கால்நடைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதுடன், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றைக் கடக்க முயற்சிக்கவோ வேண்டாம் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆண்டுதோறும் மழை காலங்களில் கொள்ளிடம் ஆற்றின் வழியே பல லட்சம் கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க கொள்ளிடம் ஆற்றில் ஒவ்வொரு 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பணை அமைக்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை கொடுத்துள்ளனர்

