'வயநாடு நிலச்சரிவு: சுற்றுச்சூழல் அமைச்சகம் பதிலே சொல்லவில்லையே?' பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை
'வயநாடு நிலச்சரிவு: சுற்றுச்சூழல் அமைச்சகம் பதிலே சொல்லவில்லையே?' பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை
ADDED : ஆக 15, 2025 01:22 AM
சென்னை:கேரள மாநிலம், வயநாட்டில், கடந்த 2024 ஜூலை 30ம் தேதி, அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில், 300 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பல கிராமங்கள் முற்றிலும் அழிந்தன.
இது தொடர்பாக, நாளிதழ்களில் வெளியான செய்தி அடிப்படையில், தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது.
'இனியும் தாமதிக்காமல், நாடு முழுதும் நிலச்சரிவு ஆபத்துள்ள பகுதிகளை உள்ளடக்கிய, சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள், இறுதி அறிவிப்பை வெளியிட வேண்டும்' என, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தென் மண்டல பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா பிறப்பித்த உத்தரவு:
நிலச்சரிவு, ஆபத்து பகுதிகளை அடையாளம் கண்டு வெளியிட வேண்டும் என்ற தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், பதில் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. அடுத்த விசாரணை, வரும் அக்., 15ல் நடக்கும்.
அப்போது, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட அதிகாரி, நேரில் ஆஜராக அழைக்கப்படுவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.