நாங்களும் பலமான கூட்டணி அமைத்திருக்கிறோம்: பழனிசாமி
நாங்களும் பலமான கூட்டணி அமைத்திருக்கிறோம்: பழனிசாமி
ADDED : மார் 14, 2024 12:49 AM

சென்னை,:''பலமான கூட்டணி என, சிலர் மார் தட்டிக் கொள்கின்றனர். நாங்களும் பலமான கூட்டணி அமைத்திருக்கிறோம். தமிழக மக்களோடு கூட்டணி வைத்திருக்கிறோம். இந்த கூட்டணியை விட வேறு எது பலமான கூட்டணி?
''லோக்சபா தேர்தலில் அது தெரியத்தான் போகிறது. தி.மு.க., ஆட்சி முடியத்தான் போகிறது,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
அ.தி.மு.க., சார்பில், நேற்று சென்னையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது:
அ.தி.மு.க.,வின் கடமைகளில் ஒன்று, முஸ்லிம் சமுதாயத்தினருக்கு, பல்வேறு வகைகளில் பாதுகாப்பு அரணாக விளங்குவது.
அ.தி.மு.க., ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில், சட்டம் - ஒழுங்கு பேணி காக்கப்பட்டு, பொதுமக்கள் குறிப்பாக சிறுபான்மையின மக்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் வாழ்ந்தனர்.
ஆனால், இன்றைய தி.மு.க., ஆட்சியில், சிறுபான்மையின மக்கள் உள்ளிட்ட அனைவரும், அச்சத்துடன் பல இன்னல்களுக்கு ஆளாகி துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலை மாற, மன அமைதியுடன் வாழ, ஒற்றுமையுடன் பணியாற்றி, கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களை, வெற்றி பெறச் செய்வோம். தீய சக்திகளை அகற்றுவோம்.
பலமான கூட்டணி என்று சிலர் மார் தட்டிக் கொள்கின்றனர். நாங்களும் பலமான கூட்டணி அமைத்திருக்கிறோம். தமிழக மக்களோடு கூட்டணி வைத்திருக்கிறோம்.
இந்தக் கூட்டணியை விட வேறு எது பலமான கூட்டணி?
லோக்சபா தேர்தலில், அது தெரியத்தான் போகிறது. தி.மு.க., ஆட்சி முடியத்தான் போகிறது.
தி.மு.க., செய்ததாக சொன்னதெல்லாம் சும்மா. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தொடர்ந்து, முஸ்லிம்களுக்கு அரணாக இருப்பது நாம்தான். பாதுகாப்பாக இருக்கப் போவதும் நாம்தான். பக்கபலமாக இருக்கப் போவதும் நாம்தான்.
சிறுபான்மையினர் மீது ஜெயலலிதா காட்டிய அன்பை, கொஞ்சம் கூட குறையாமல் நாங்களும் காட்டுவோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.

