அரசியல் இருக்காது என்று தான் கலந்து கொண்டோம்: உதயகுமார்
அரசியல் இருக்காது என்று தான் கலந்து கொண்டோம்: உதயகுமார்
ADDED : ஜூன் 25, 2025 01:40 AM
சென்னை: 'முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் இருக்காது என்று கருதியே கலந்து கொண்டோம்,' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
கடந்த 22ம் தேதி, மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில், ஈ.வெ.ரா., அண்ணாதுரையை விமர்சித்து வீடியோ வெளியிட்டதற்கு, தி.மு.க., - ம.தி.மு.க., உள்ளிட்ட பா.ஜ.,வை எதிர்க்கும் கட்சிகள் மட்டுமல்லாது, கூட்டணி கட்சியான அ.தி.மு.க.,வும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான உதயகுமார் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:
'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என்ற அண்ணாதுரையின் கூற்றுப்படி, அன்பான அழைப்பை ஏற்று, முருக பக்தர்கள் மாநாட்டில், முருக பக்தர்கள் என்ற அடிப்படையிலேயே கலந்து கொண்டோம்.
இந்த மாநாட்டில் அரசியல் இருக்காது என்ற நம்பிக்கையோடுதான் கலந்து கொண்டோம். ஆனால், மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவில், ஈ.வெ.ரா., அண்ணாதுரை குறித்து அவதுாறு பரப்பப்பட்டதாக, இப்போது பரபரப்பாக செய்திகள் வருகின்றன.
அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை ஒருநாளும் கொள்கை, கோட்பாடுகள், லட்சியங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம். இது தமிழக மக்களுக்கும், தி.மு.க.,வுக்கும் நன்றாகத் தெரியும்.
ஆனால், அ.தி.மு.க., மீது அவதுாறு பரப்ப, ஏதாவது சாக்குப்போக்கு கிடைக்காதா என்ற வகையில்தான், தி.மு.க.,வினர் அவதுாறு பரப்புகின்றனர்.
ஏற்கனவே அண்ணாதுரை, ஜெயலலிதாவை பற்றி பா.ஜ., தரப்பில் அவதுாறாகப் பேசியதால், பழனிசாமி என்ன முடிவெடுத்தார் என்பதை, அனைவரும் அறிவர். அதை இப்போது நினைவுபடுத்த விரும்புகிறேன்.
எல்லாவற்றிலும் சமாதானம் செய்து கொண்டு ஆட்சியை தக்க வைக்கிற கட்சி, அ.தி.மு.க., அல்ல.
முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மாநாட்டில் என்ன செய்யப் போகின்றனர் என்பதும் எங்களுக்குத் தெரியாது.
அண்ணாதுரை, ஈ.வெ.ரா., பற்றிய வீடியோ ஒளிபரப்பப்பட்டபோது, அதை காணும் வாய்ப்பு எங்களுக்கு இல்லை. அந்த வீடியோவுக்கு, அ.தி.மு.க., தரப்பிலும் எங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
அண்ணாதுரையால் துவங்கப்பட்ட தி.மு.க.,வை ஒரு குடும்ப சொத்தாக்கி, அதன் வாயிலாக தமிழகத்தை சொத்தாக்க, அ.தி.மு.க., தடையாக உள்ளது என்பதால், திரும்பத் திரும்ப அ.தி.மு.க.,வை வம்புக்கிழுத்து அவதுாறு பரப்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.