ம.தி.மு.க.,வுக்கு கூடுதல் சீட் கேட்போம் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் ஈரோட்டில் வைகோ உறுதி
ம.தி.மு.க.,வுக்கு கூடுதல் சீட் கேட்போம் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் ஈரோட்டில் வைகோ உறுதி
ADDED : ஜூன் 23, 2025 03:40 AM

ஈரோடு: 'தி.மு.க., கூட்டணியில், 10 தொகுதிகள் வரை கேட்போம். ஆனால், ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. கட்சியின் அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில், பொதுச்செயலர் வைகோ, முதன்மை செயலர் துரை வைகோ இருவருக்கும் ஆளுயர ரோஜா மாலை அணிவித்து, நினைவு பரிசு வழங்கப்பட்டது.
கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
ம.தி.மு.க., எப்போதும் மக்களுக்கான இயக்கமாகவே இருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், பலமுறை பிரதமரை சந்தித்து விளக்கினேன். உச்ச நீதிமன்றத்தில், 'அணை பலமாக உள்ளது; உடைக்க தேவையில்லை' என தீர்ப்பை பெற்றோம். 18 ஆண்டுகளாக, ஐந்து உண்ணாவிரதம், மூன்று மறியல், இரண்டு நடைபயணம் என போராடி, ஸ்டெர்லைட் ஆலையை மூடினோம். ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, மீத்தேன் திட்டங்களிலும் போராடுகிறோம்.
ஒரு கட்சிக்கு இரண்டு எம்.பி.,க்கள் இருந்தாலே, அக்கட்சிக்கு அங்கீகாரம் வழங்கலாம் என்ற விதியை கொண்டு வர நானே காரணம்.
அதனால்தான் இன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்றுள்ளது. 2019 லோக்சபா தேர்தலில், ஈரோட்டில் ம.தி.மு.க.,வின் கணேசமூர்த்திக்கு மட்டுமே ஒரு சீட் வழங்கப்பட்டது.
அப்போது, எனக்கு சிவகாசியில் வாய்ப்பு வழங்கக் கோரினோம். அப்படி செய்து இருந்தால், அங்கு நானும் வெற்றி பெற்றிருப்பேன். கூடவே, தேர்தல் கமிஷன் அங்கீகாரமும் பெற்றிருப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.

