அரசியல் அதிகாரத்தை இழந்த குடிமக்களாகி விடுவோம்: ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
அரசியல் அதிகாரத்தை இழந்த குடிமக்களாகி விடுவோம்: ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ADDED : மார் 23, 2025 01:28 AM

சென்னை: ''நியாயமான தொகுதி மறுசீரமைப்பை அடையும் வரை, நாம் இணைந்து போராடுவோம்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
லோக்சபா தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படக் கூடிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய, கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது. அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
இந்திய ஜனநாயகத்தை காக்க, நாம் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளோம். இந்திய ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சியை காக்க, நாம் ஒன்று கூடி இருக்கிறோம்.
முக்கியமான நாள்
ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு வகையில் தனித்தன்மை உடையது. இத்தகைய மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டால் தான், இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி உருவாக முடியும். சிறந்த வளர்ச்சியை அடைய முடியும்.
பல்வேறு கால கட்டங்களில், கூட்டாட்சி தன்மைக்கு சோதனை வந்தாலும், அதை ஜனநாயக அமைப்புகள், இயக்கங்கள், தடுத்து வந்துள்ளன. அத்தகைய சோதனையும், ஆபத்தும் தான் இப்போதும் வந்துள்ளது.
என்னை பொறுத்தவரை, இந்திய கூட்டாட்சியை காக்கும் வரலாற்றில், மிக முக்கியமான நாளாக, இந்த நாள் அமையப் போகிறது. மக்கள்தொகை அடிப்படையில், தொகுதி மறுசீரமைப்பு என்பது, நம்மை போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கப் போகிறது.
குறையும் வலிமை
மக்கள் தொகையை, பல்வேறு சமூகநலத் திட்டங்கள் வழியாக கட்டுப்படுத்திய நம்மை போன்ற மாநிலங்கள், அதன் காரணமாக, லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கையில், நமது பிரதிநிதித்துவத்தை அதிகம் இழக்க நேரிடும். எனவே, இதை நாம் எதிர்க்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.
தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில், தொகுதி மறுசீரமைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில், நாம் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். இங்குள்ள ஒவ்வொரு மாநிலமும், மக்கள் தொகை கட்டுப்பாட்டின் வழியே, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன.
இந்த மாநிலங்களை தண்டிப்பதாக, இந்த நடவடிக்கை இருக்கப் போகிறது. மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவதன் வழியாக, நமது எண்ணங்களை சொல்வதற்கான வலிமை குறைகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. ஆனால், நீதிக்கான குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
ஏனெனில் நாட்டின் கவனத்தை ஈர்க்க, அவர்களுக்கு அரசியல் வலிமை இல்லை. எனவே, லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை குறைவது, நமது அரசியல் வலிமையை குறைப்பதாகவே பார்க்க வேண்டும்.
தொகுதிகள் எண்ணிக்கையை குறைக்க அனுமதித்தாலோ, மாநில பிரதிநிதித்துவத்தை குறைக்க அனுமதித்தாலோ, நம் சொந்த நாட்டில், நாம் அரசியல் அதிகாரம் இழந்த குடிமக்களாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை, சாதாரணமாகக் கருதக்கூடாது.
ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும், எந்தவொரு நடவடிக்கையையும், நாம் எதிர்க்கவில்லை. ஆனால், அந்த நடவடிக்கையானது, நியாயமான அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்கக்கூடாது.
இந்த போராட்டம், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானது அல்ல. இந்தப் போராட்டம் நியாயமான தொகுதி மறுசீரமைப்பை வலியுறுத்துகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'தமிழகம் மற்றும் பிற தென் மாநிலங்கள், விகிதாச்சார அடிப்படையில், லோக்சபா தொகுதிகளை இழக்காது' எனக் கூறி உள்ளார். அவரது விளக்கம் குழப்பமாக இருக்கிறது.
மாநில உரிமைகளை பறிக்கிற கட்சியாக, பா.ஜ., இருந்துள்ளது. அவர்கள் தங்கள் உள்நோக்கத்தை தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தில் செய்ய நினைக்கின்றனர். இதை எந்த மாநிலமும் அனுமதிக்கக் கூடாது.
சட்ட நடவடிக்கை
இந்த குழுவுக்கு, 'நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு' என பெயரிடுவோம். நாம் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல. நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கு ஆதரவானவர்கள் என்பதை, இந்தப் பெயரே சொல்லும்.
அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை வரையறுக்க, வல்லுநர் குழுவை அமைக்க முன்மொழிகிறேன். ஒற்றுமை உணர்வோடு, அனைவரும் ஒன்றுபட்டு போராடினால்தான், வெற்றி பெற முடியும். எந்த சூழலிலும் நமது பிரதிநிதித்துவம் குறையக் கூடாது; குறைய விடக்கூடாது என்ற உறுதியோடு போராடுவோம். நியாயமான தொகுதி மறுசீரமைப்பை அடையும் வரை, நாம் இணைந்து போராடுவோம்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.