'எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்துவோம்' எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் அ.தி.மு.க., உறுதிமொழி
'எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்துவோம்' எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் அ.தி.மு.க., உறுதிமொழி
ADDED : டிச 24, 2024 09:22 PM

சென்னை:'எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்துவோம்' என்று, எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், அக்கட்சியினர் நேற்று உறுதிமொழியேற்றனர்.
அ.தி.மு.க., நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 37வது நினைவு தினம் தமிழகம் முழுதும் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, வேலுமணி, விஜயபாஸ்கர், உதயகுமார், ஜெயகுமார், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி உள்ளிட்டோர் கருப்பு சட்டை அணிந்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின், பழனிசாமி தலைமையில் உறுதிமொழி எடுத்தனர்.
அதன் விபரம்:
* எம்.ஜி.ஆர்., வகுத்து தந்த பாதையில் இருந்து தடம் மாறாது, தடுமாறாது, சோர்ந்து போகாது, சோரம் போகாது ஒற்றுமை உணர்வோடு பயணிப்போம்
* அராஜகத்தின் அடையாளம் தி.மு.க.,வை வீழ்த்தும் தெய்வ சக்தியாய் நின்றவர் எம்.ஜி.ஆர்., அவர் வழி நின்று, எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்துவோம்
* தி.மு.க., ஆட்சியில் குடும்ப கொடி பறக்குது. பொய்யான வாக்குறுதிகளைத் தந்து, வஞ்சக மனம் கொண்டு, தமிழக மக்களை ஏமாற்றிய தி.மு.க.,வை வேரோடும், வேரடி மண்ணுமாக வீழ்த்துவோம்.
* மின் கட்டணம், பால் விலை, குடிநீர் கட்டணம், சொத்து வரி, முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப சபதம் ஏற்போம்
* அன்றாடம் மக்களை ஏமாற்றி வரும் பொம்மை முதல்வர் ஸ்டாலினின் மக்கள் விரோத ஆட்சியின் அவலங்களை, மக்களிடம் பிரசாரம் செய்வோம்
* குடும்ப ஆட்சியின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை காப்பாற்ற, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் தொடர்ந்து பயணிப்போம். தி.முக., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்.
இவ்வாறு உறுதிமொழியேற்றனர்.
பன்னீர்செல்வம், தினகரன் அஞ்சலி:
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர், எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர்.
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், முன்னாள் அமைச்சர் செந்தமிழன் உள்ளிட்டோரும், எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.