ADDED : மார் 08, 2026 02:02 AM
சென்னை: பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி அனுபவத்துக்கு ஏற்ப, 'வெயிட்டேஜ் மார்க்' ஆக அதிகபட்சம் 15 மதிப்பெண் வழங்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் உடற்கல்வி, தையல், ஓவியம், இசை உள்ளிட்ட பாடப்பிரிவுகளில், 10,000க்கும் அதிகமான பகுதிநேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என, தொடர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்தப்படும் சிறப்பு ஆசிரியர் பணி நியமனத்துக்கான தேர்வில், பகுதிநேர ஆசிரியர்களுக்கு, பணிக்காலத்துக்கு ஏற்ப சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்திரமோகன் பிறப்பித்துள்ள அரசாணை:
சிறப்பு ஆசிரியர்கள் பதவிக்கான தேர்வில், ஒவ்வொரு ஆண்டும் பணி அனுபவத்துக்கு, வெயிட்டேஜ் மார்க் என, அதிகபட்சமாக 15 மதிப்பெண் வழங்கப்படும்.
கடந்த 2011 முதல் இடைவெளி இல்லாமல் பணியாற்றிருக்க வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் அடுத்து நடத்தும், ஐந்து ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
