கடலில் கலக்கும் நீரை பாதுகாக்கும் என்னென்ன திட்டங்கள்? அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
கடலில் கலக்கும் நீரை பாதுகாக்கும் என்னென்ன திட்டங்கள்? அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
ADDED : ஜூலை 30, 2024 03:31 PM

சென்னை: வீணாக கடலில் கலக்கும் நீரைப் பாதுகாக்கும் திட்டம் குறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பருவமழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரைப் பாதுகாக்கும் வகையில் சென்னையில் உள்ள ஏரிகளைச் சீரமைக்கக் கோரி ஜெகன்நாத் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு விசாரணை நடத்தியது.
அப்போது நீதிபதிகள், ‛‛ சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பருவமழை காலங்களில் வீணாகும் நீரை அருகில் உள்ள ஏரிகளுக்குத் திருப்பி விட்டு ஏன் பாதுகாக்கக்கூடாது? '' என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எட்வின் பிரபாகர், நீர்வளத்துக்கு என தனித்துறை உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், உபரி நீரை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், இது சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பருவமழை காலத்தில் வீணாகக் கடலில் கலக்கும் நீரைப் பாதுகாப்பது குறித்த திட்டம் உருவாக்க வேண்டும். அது தொடர்பான விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மழைநீரை ஏரி குளங்களுக்கு திருப்பி விடுவதால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். நீர்வளத்துறை உருவாக்கப்பட்ட பிறகு மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரம் தள்ளி வைத்தனர்.