ADDED : ஆக 17, 2025 03:18 AM
சென்னை: ஒரத்தநாடு, நெய்வேலி சட்டசபை தொகுதி தி.மு.க., நிர்வாகிகளுடன், அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், நேற்று ஆலோசனை நடத்தினார்.
வரும், 2026 சட்டசபை தேர்தலையொட்டி, 'உடன்பிறப்பே வா' என்ற பெயரில், சட்டசபை தொகுதி வாரியாக, தி.மு.க., நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து, முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, தி.மு.க., தலைமை அலுவலகமான, சென்னை அறிவாலயத்தில், ஒரத்தநாடு, நெய்வேலி சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலர்களுடன் நேற்று காலை ஆலோசனை நடத்தினார்.
ஒவ்வொரு நிர்வாகியையும் தனித்தனியாக சந்தித்த ஸ்டாலின், தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். தொகுதியில் தி.மு.க.,வின் செல்வாக்கு; அ.தி.மு.க.,வுக்கு எந்த அளவுக்கு பலம் உள்ளது; பூத் கமிட்டியின் செயல்பாடுகள் என, பல்வேறு தகவல்களை கேட்ட ஸ்டாலின், 'தொகுதி மக்கள், தி.மு.க., மற்றும் அரசிடம் எதிர்பார்க்கும் உதவிகள், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்த எதிர்மறை எண்ணங்கள் நீக்கி, கட்சிப் பணியையும் திறம்பட செய்ய வேண்டும்,' என்று கூறி இருக்கிறார்.