ADDED : ஜூன் 30, 2025 11:58 PM

திருப்புவனம், ஜூலை 1---
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் பக்தரின் நகை காணாமல் போன புகாரில் போலீஸ் விசாரணைக்கு சென்ற காவலாளி அஜித்குமார் 29, உயிரிழந்தார். அவர் இறந்தது குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் சிவகாமி 76, மகள் நிகிதா 42. சிவகாமிக்கு உடல் நலம் சரியில்லாததால் ஸ்கேன் எடுக்க டாக்டர் பரிந்துரை செய்துள்ளார். ஜூன் 27ல் ஸ்கேன் எடுக்க சென்ற போது நகைகளை கழற்றி பர்சில் வைத்து கட்டை பையில் வைத்து பையை காரின் பின் சீட்டில் வைத்தனர்.
அதற்கு முன் மடப்புரம் கோயிலுக்கு செல்ல வேண்டும் என சிவகாமி கூறியதால் கோயிலுக்கு காலை 9:30 மணிக்கு காரில் வந்தனர். காரை நிகிதா ஓட்டினார்.
மடப்புரம் கோயில் அருகே காரிலிருந்து இறங்கி அங்கிருந்தவர்களிடம் வீல் சேர் கேட்டனர். கோயிலில் இருந்த பாதுகாப்பு நிறுவன காவலாளி அஜித்குமார் வீல்சேர் கொண்டு வந்து கொடுத்தார். அப்போது அஜித்குமார் நாங்கள் (காவலாளிகள்) ஐந்து பேர் உள்ளோம் எனக் கூறி 500 ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் நிகிதா 100 ரூபாய் மட்டும் கொடுத்தார்.
பின் நிகிதா கார் சாவியை அஜித்குமாரிடம் கொடுத்து காரை பார்க் செய்து தருமாறு கூறினார். அஜித்குமாருக்கு கார் ஓட்ட தெரியாததால் அருகில் இருந்த ஆட்டோ டிரைவர் அருணிடம் சாவியை கொடுத்து காரை பார்க்கிங்கில் நிறுத்தியுள்ளனர்.
நீண்ட நேரம் கழித்து நிகிதாவிடம் கார் சாவியை ஒப்படைத்தனர். தரிசனம் முடிந்த பின் மீண்டும் அஜித்குமார் மூலமாகவே பார்க்கிங்கில் இருந்து காரை கோயில் வாசலுக்கு கொண்டு வரச் செய்தனர். காரில் நிகிதாவும் சிவகாமியும் புறப்பட்ட நிலையில் திருப்புவனம் மின்வாரிய அலுவலகம் அருகே காரை நிறுத்தி நகைகள் இருக்கின்றனவா என்று பார்த்த போது, கட்டைப்பையில் பர்சில் வைத்திருந்த ஒன்பதரை பவுன் தங்க நகைகள்( செயின், மோதிரம், 2 வளையல்கள்) காணாமல் போனது தெரியவந்தது.
மீண்டும் காரில் கோயிலுக்கு வந்து அஜித்குமாரிடம் விசாரித்தனர். அவர் சரியாக பதில் சொல்லாததால் கோயில் அலுவலகத்தில் புகார் செய்தனர். அங்கிருந்தவர்கள் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லுமாறு கூறியதால் அங்கு சென்று மதியம் 2:00 மணிக்கு புகார் செய்தனர். போலீசார் அஜித்குமாரை ஸ்டேஷனுக்கு வரவழைத்து அமர வைத்தனர். விசாரிக்க கூட இல்லை. இரவு 9:00 மணி வரை போலீசார் சி.எஸ்.ஆர்., (புகார் அளித்ததற்கு ஆதாரமான ரசீது) கூட கொடுக்கவில்லை. 10:00 மணிக்கு புகார் அளித்தவர்களிடம் சி.எஸ்.ஆர்., கொடுத்தனர்.
ஜூன் 28 காலை மானாமதுரை உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசார் அஜித்குமார், காரை பார்க் செய்த அருண், அஜித்குமாரின் சகோதரர் நவீனிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் நகையை எடுக்கவில்லை என கூறினர். நவீன், அருணை போலீசார் விடுவித்தனர். ஜூன் 28ல் அஜித்குமாரை கார் நிறுத்தப்பட்ட இடம், கார் பார்க் செய்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
மாலை 5:00 மணிக்கு கோயில் அலுவலகம் பின்புறம் உள்ள கோசாலையில் வைத்த விசாரணை நடத்திய போது அஜித்குமார் மயங்கி விழுந்தார். திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின் மதுரைக்கு பரிந்துரை செய்தனர். செல்லும் வழியிலேயே அஜித்குமார் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து அஜித்குமாரின் உறவினர்கள் திருப்புவனம் காவல் நிலையத்தை இரவு 8:00 மணிக்கு முற்றுகையிட்டனர். அஜித்குமார் எங்கு இருக்கிறார். உயிருடன் உள்ளாரா இல்லையா என கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 10:00 மணிக்கு அஜித்குமார் இறந்த தகவலை உறவினர்களிடம் போலீசார் தெரிவித்தனர்.
ஜூன் 29ல் அஜித்குமார் இறப்புக்கு காரணமான குற்றப்பிரிவு போலீசார் பிரபு, கண்ணன்,ஆனந்த், மணிகண்டன், ராமச்சந்திரன், ராஜா ஆகிய ஆறு பேர் மீது வழக்கு பதிய வேண்டும். அவர்களை கைது செய்ய வேண்டும், அஜித்குமாரின் சகோதரர் நவீனுக்கு அரசு பணி வழங்க வேண்டும் எனக்கோரி உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர்.
மடப்புரத்தில் அ.தி.மு.க., பா.ஜ., கம்யூனிஸ்ட், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் குவிந்தனர். இதனிடையே தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் கட்சியினருடன் வந்து அஜித்குமாரின் தாயார் மாலதி, சகோதரர் நவீன், உறவினர் ஒருவர் ஆகிய மூன்று பேரையும் முன்னாள் லாடனேந்தல் ஒன்றிய கவுன்சிலர் சுப்பையா காரில் ஏற்றி அஜித்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றார். அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அ.தி.மு.க.,வினர், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் போலீஸ் வாகனத்தில் மூவரையும் அழைத்து கொண்டு மதுரை சென்றனர்.
மதுரையில் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் விசாரணைக்கு பின் அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இரவு 11:00 மணிக்கு மடப்புரம் சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது. நேற்று மாலை 4:00 மணிக்கு சம்பவம் நடந்த இடங்களை மாவட்ட உரிமையியல் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் நேரில் பார்வையிட்டு கோயில் செயல் அலுவலர் கணபதி முருகனிடம் விசாரணை நடத்தினார்.
பின் காரில் கிளம்பும்போது அஜித்தின் உறவினர் ரேகா நீதிபதியிடம் தங்கள் தரப்பை தெரிவிக்க வேண்டும் என காரை மறித்தார். சில நிமிடங்கள் நீதிபதியிடம் பேசிய பின் நீதிபதி புறப்பட்டு சென்றார்.