பெயர் சூட்டும்போது நினைத்தது நிறைவேறிவிட்டது: சி.பி.ராதாகிருஷ்ணன் தாய் நெகிழ்ச்சி
பெயர் சூட்டும்போது நினைத்தது நிறைவேறிவிட்டது: சி.பி.ராதாகிருஷ்ணன் தாய் நெகிழ்ச்சி
UPDATED : ஆக 17, 2025 10:13 PM
ADDED : ஆக 17, 2025 10:07 PM

திருப்பூர்: ''முன்னாள் ஜனாதிபதி சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் போல் வரவேண்டும் என்று எண்ணி பெயர் வைத்தோம். இன்று அது நிறைவேறும் தருணம் வந்துவிட்டது,'' என்று துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனின் தாயார் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவல் வெளியானதும் திருப்பூரில் உள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டில் அவரது தாய் ஜானகி அம்மாள், பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.பி. ராதாகிருஷ்ணனின் தாய் ஜானகி அம்மாள் கூறுகையில் , ''என் மகன் பிறந்த போது முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போல் வரவேண்டும் என ஆண்டவனை பிரார்த்தனை செய்து பெயர் வைத்தோம். இன்று அது நிறைவேறும் தருணமாக மாறி உள்ளது.
நிச்சயம் துணை ஜனாதிபதி தேர்தலில் என் மகன் வெற்றி பெற்று தொடர்ந்து மக்கள் சேவையை செய்வார். இது திருப்பூருக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை கூட்டக்கூடிய தருணமாக அமைந்திருக்கிறது. என் மகன் சி.பி. ராதாகிருஷ்ணன் பெயரை பரிந்துரை செய்த பாஜகவிற்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி,'' என தெரிவித்தார்.