மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர் கேள்விக்கு அமைச்சர் பதில்
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர் கேள்விக்கு அமைச்சர் பதில்
ADDED : மார் 18, 2025 04:59 AM

சென்னை : “மாந்திரீக பூஜை என்றால் என்ன,” என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கேட்ட கேள்விக்கு, “மாந்திரீகம் என்ற ஒரு வார்த்தை, இந்த ஆட்சியில் எங்கும் இல்லை,” என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - ராஜேந்திரன்: திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலுக்கு, திருமண மண்டபம் கட்ட வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: இக்கோவில் பஞ்ச சபைகளில் ஒன்றான ரத்னசபை என அழைக்கப்படுகிறது. காரைக்கால் அம்மையார், இல்லற வாழ்வை துறந்து, துறவியாக முக்தி பெற்ற கோவில் என்பதால், ஐதீகப்படி திருமணம் போன்ற சுப காரியங்களை, இந்த கோவிலை மையப்படுத்தி நடத்துவதில்லை. எனவே, அங்கு திருமண மண்டபம் கட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
ராஜேந்திரன்: இக்கோவில், மாந்திரீக பூஜை நடத்துவதற்கு உண்டான இடம். தமிழகம் முழுதும் இருக்கக்கூடிய மக்கள் சனிக்கிழமை வந்து, மாந்திரீக பூஜை நடத்துகின்றனர். அதற்கு கோவிலில் சிறிய இடம் தான் உள்ளது. சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், பிரதோஷம் போன்ற நாட்களில், இங்கு வரக்கூடிய பக்தர்கள், தங்க விடுதி அமைக்க வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: துறை அலுவலர்களை அனுப்பி ஆய்வு செய்து, வாய்ப்பு இருந்தால் நிச்சயம் ஏற்படுத்தி தரப்படும்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: மாந்திரீக பூஜை என்றால் என்ன என்று, அமைச்சர் விளக்கம் அளிப்பாரா?
அமைச்சர் சேகர்பாபு: நீங்களும் ஆன்மிகவாதி. நீண்ட நெடிய படிக்கட்டுகளில், பல கோவில்களில், எண்ணங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக சுற்றி வரும் உங்களுக்கு தெரியாதது ஒன்றும் அல்ல.
மாந்திரீகம் என்ற ஒரு வார்த்தை, இந்த ஆட்சியில் எங்கும் இல்லை. பரிகார பூஜையை தான், அவர் மாந்திரீக பூஜை என்று மாற்றி சொல்லி விட்டார். பரிகார பூஜை மண்டபம் தான் கேட்டார். அது ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.