ADDED : ஜூன் 06, 2025 06:07 AM
சென்னை: தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நாளை நடக்கிறது.
அடுத்தாண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெறும் இலக்குடன், தேர்தல் பணிகளை தி.மு.க., துவக்கி உள்ளது.
அதற்காக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, வேலு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், எட்டு மண்டல பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு, தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதற்கிடையில், மதுரையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், 'ஓரணியில் தமிழகம்' என்ற திட்டத்தை ஸ்டாலின் அறிவித்தார். மேலும், ஓட்டுச்சாவடி வாரியாக உள்ள வாக்காளர்களில் 30 சதவீதம் பேரை, தி.மு.க., உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த பணிகள் குறித்து, மாவட்டச் செயலர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
இதற்கான அறிவிப்பை, பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
மாவட்டச் செயலர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தும்போது, வாக்காளர்களில் 30 சதவீதம் பேரை, தி.மு.க., உறுப்பினராக்க வேண்டும் என்ற பணியை, யாரெல்லாம் விரைந்து செய்து வருகின்றனர் என்பது குறித்தும், மாவட்டங்களில் உள்ள தொகுதிகளின் நிலை என்ன என்பது குறித்தும், மா.செ.,க்கள் ஒவ்வொருவரிடமும் முதல்வர் கேட்டு தெரிந்துகொள்ள இருக்கிறார்.
கூடவே, ஒவ்வொரு தொகுதியிலும் மா.செ.,க்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும், ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருக்கும் விபரங்களையும் ஒவ்வொருவரிடமும் எடுத்துச் சொல்லவிருப்பதாகவும் அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.