ஸ்ரீரங்கம் - அயோத்தி என்ன சம்பந்தம்? மோடி வருகை குறித்து பட்டர் விளக்கம்
ஸ்ரீரங்கம் - அயோத்தி என்ன சம்பந்தம்? மோடி வருகை குறித்து பட்டர் விளக்கம்
ADDED : ஜன 19, 2024 12:48 AM
திருச்சி:வரும் 22ல், உ.பி.,யின் அயோத்தி நகரில், ராமர் கோவில் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பதற்கு முன், பிரதமர் மோடி தமிழகத்தின் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் புனித தலங்களில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகம் நடத்தப்படும் நிலையில், பிரதமர் மோடி, ஸ்ரீரங்கத்துக்கு வந்து, ரெங்கநாதரை தரிசித்து செல்வது ஏன் என்பது பற்றி, ஸ்ரீரங்கம் கோவில் தலைமை பட்டர் சுந்தர் கூறியதாவது:
ஜீவாத்மா, பரமாத்மாவை அடைவதற்கான வாழ்க்கை நெறிமுறைகளை சொல்லி கொடுத்தவர் அவதார புருஷனான ராமர்.
ராமன் அவதரித்ததால் அயோத்திக்கு பெருமை. அயோத்தியின் தசரத வம்சத்திற்கு குலதெய்வமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தான், ராமர் தினமும் தொழுது வந்தார்.
அதனால், அயோத்தி மாநகருக்கும், ஸ்ரீரங்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
ராம அவதாரம் நிறைவு காலத்தில், தன்னிடம் அடைக்கலமாகி இருந்த அனைவருக்கும், ராமர் தனித்தனியாக பரிசு கொடுத்தார். அதில், ராவணனின் சகோதரரான விபீஷணனுக்கு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை பரிசாக கொடுத்தார்.
ராவணனை வெற்றி கொண்ட ராமர், இலங்கையை மீட்டு, விபீஷணனிடம் ஒப்படைத்தார். ராமர் கொடுத்த பரிசுடன் இலங்கைக்கு புறப்பட்ட விபீஷ ணன், ரெங்கநாதரை அவருடன் எடுத்துச் சென்றார்.
விபீஷணனால் எடுத்துச் செல்லப்பட்ட ரெங்கநாதர், முன்னரே சங்கல்பம் செய்தபடி, கொள்ளிடத்திற்கும், காவிரிக்கும் இடைப்பட்ட பகுதியில், ஸ்ரீரங்கத்தில் கிடந்த கோலத்தில் எழுந்தருளினார்.
அதனால், அயோத்தியும், ஸ்ரீரங்கமும் பிரிக்க முடியாத திவ்ய தேசங்களாக திகழ்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

