வேன் டிரைவர் உடலை ஒப்படைக்க நடவடிக்கை என்ன? அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
வேன் டிரைவர் உடலை ஒப்படைக்க நடவடிக்கை என்ன? அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
ADDED : மார் 19, 2024 11:08 PM
மதுரை : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போலீஸ் விசாரணைக்கு சென்றதில் இறந்த வேன் டிரைவரின் உடலை ஒப்படைக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சங்கரன்கோவில் ேஷக் திவான் அலி தாக்கல் செய்த பொதுநல மனு:
நான் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர். மார்ச் 13 ல் ஒருவரை சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை நோக்கி கொண்டு சென்றேன். சிலர் ரோட்டில் கற்களை வைத்து தடுத்து வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர். கடைகளுக்கு சேதம் விளைவித்தனர். வடக்குபுதுார் வேன் டிரைவர் முருகனை போலீசார் தாக்கியதில் இறந்தார்; சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை; மறியல் செய்கிறோம் என்றனர்.
சட்டவிரோதமாக கூடி போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும்காலங்களில் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: முருகன் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.,போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனை முடிந்துவிட்டது. முருகனின் உடலை பெற குடும்பத்தினர் மறுக்கின்றனர். ரூ.1 கோடி இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என கோருகின்றனர். மார்ச் 22 க்குள் உடலை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: இவ்விவகாரத்தில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து கலெக்டர், எஸ்.பி., நாளை (மார்ச் 21) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

