'நீட்' தேர்வை ரத்து செய்ய தமிழக அரசின் திட்டம் என்ன? * ராமதாஸ் கேள்வி
'நீட்' தேர்வை ரத்து செய்ய தமிழக அரசின் திட்டம் என்ன? * ராமதாஸ் கேள்வி
ADDED : ஏப் 05, 2025 09:26 PM
சென்னை:'மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவுத் தேர்வை ரத்து செய்ய, தமிழக அரசு என்ன திட்டம் வைத்துள்ளது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தை சேர்ந்த, பிளஸ் 2 மாணவி சக்தி புகழ்வாணி, 'நீட்' தேர்வு அச்சத்தால், துாக்க மாத்திரைகளை விழுங்கி, தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு அச்சத்தால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், நான்கு மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்த தேர்வால் ஏற்படும் மன உளைச்சலுக்கு தற்கொலை தீர்வல்ல என்பதை, மாணவர்கள் உணர வேண்டும். தங்கள் பிள்ளைகள் மருத்துவம் படிப்பது தான் பெருமை என்ற மாயையிலிருந்து, பெற்றோர் வெளியில் வர வேண்டும்.
'ஆட்சிக்கு வந்தால், அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம்' என்று வாக்குறுதி அளித்து, தி.மு.க., ஆட்சியைப் பிடித்தது. ஆனால், சட்டசபையில் சட்டம் இயற்றி, மத்திய அரசுக்கு அனுப்பியதுடன், கடமையை முடித்துக் கொண்டது. இந்த சட்டத்தை ஏற்க, மத்திய அரசு மறுத்து விட்டதால், 'நீட்' அச்சுறுத்தல் நிரந்தரமாகி விட்டது.
இந்த தேர்வுக்காக ஏற்கனவே நடத்தப்பட்ட சட்டப் போராட்டங்களும், சட்டம் இயற்றும் முயற்சிகளும் தோல்வியடைந்து விட்டன. மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான நடவடிக்கைகள், இனி எந்த வகையிலும் பயனளிக்காது. நீட் தேர்வை ரத்து செய்யவும், மாணவர்கள் தற்கொலையைத் தடுக்கவும் என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதை, பொது மக்கள் மத்தியில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

