கிட்னி விற்பனையை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
கிட்னி விற்பனையை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஆக 19, 2025 10:18 PM
மதுரை:'மனித உடலுறுப்புகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சத்தீஸ் வரன் தாக்கல் செய்த பொதுநல மனு:
நாமக்கல் மாவட்டத்தில், ஏழை தொழிலாளர்களை புரோக்கர்கள் மூளைச்சலவை செய்து, சட்டவிரோதமாக சிறு நீரகம் தானம் செய்பவர் களாக பயன்படுத்தினர்.
இதற்கு போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன. இம்முறைகேட்டில் திருச்சி, பெரம்பலுார் மாவட்டங்களிலுள்ள இரு தனியார் மருத்துவமனைகள் ஈடுபட்டுள்ளன. 5 முதல், 10 லட்சம் ரூபாய்க்கு, சிறுநீரகங்களை விற்பனை செய்ய தொழிலாளர்களை வற்புறுத்தியுள்ளனர்.
பெரம்பலுார் மாவட்டத்திலுள்ள ஒரு மருத்துவமனையை, மணச்சநல்லுார் தி.மு.க., -- எம்.எல்.ஏ., கதிரவனின் குடும்பம் நிர்வகிக்கிறது. திருச்சி மருத்துவமனை ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவருடன் தொடர்புடையது.
ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் மருத்துவ குழுவை அனுப்பி, மருத்துவமனையில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால், யாரோ ஒருவரின் அழுத்தம் காரணமாக அக்குழு பாதியில் திருப்பி அனுப்பப்பட்டது.
தமிழக அரசு முறையாக விசாரிக்க வாய்ப்பில்லை. சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
நீதிபதிகள்: சில மருத்துவமனைகளில் சட்டவிரோதமாக மனித உடலுறுப்புகளை திருடி விற்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இது அபாயகரமானது. மக்களை பாதுகாப்பது அரசின் கடமை.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராஜராஜன்: சிறுநீரகம் விற்பனை தொடர்பாக வழக்கு பதியவில்லை. ஆறு பேர் சிறுநீரகத்தை தானமாக வழங்கியதாக கூறும் நிலையில, ஐந்து பேர் சம்பந்தப்பட்ட ஊரிலேயே இல்லை.
நீதிபதிகள்: இதுவரை ஏன் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்து உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒருவரின் சிறுநீரகம் எப்போது திருடப்பட்டது என்பது கூட தெரியாமல் வாழ்வது வேதனையானது.
அரசு தரப்பு வழக்கறிஞர்: புகார் எதுவும் இல்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழக சுகாதாரத்துறை செயலர், மருத்துவ மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநரை இந்நீதிமன்றம் தானாக முன்வந்து எதிர்மனு தாரர்களாக சேர்க்கிறது.
அவர்கள் மனித உடலுறுப்புகள் விற்பனை செய்வதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தர விட்டனர்.