தமிழகத்திற்கு கோதுமை ஒதுக்கீடு 17,100 டன்னாக அதிகரிப்பு
தமிழகத்திற்கு கோதுமை ஒதுக்கீடு 17,100 டன்னாக அதிகரிப்பு
ADDED : செப் 26, 2024 02:29 AM

சென்னை:தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு, விருப்பத்திற்கு ஏற்ப அரிசிக்கு பதில், கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது.
சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில், ஒரு கார்டுதாரருக்கு மாதம் அதிகபட்சம், 10 கிலோவும்; மற்ற இடங்களில் வசிப்போருக்கு, 5 கிலோவும் கோதுமை வழங்கப்பட்டது.
இதற்காக தேவைப்படும் கோதுமையை, மத்திய அரசின் இந்திய உணவு கழகம் ஒதுக்கீடு செய்கிறது. அதன்படி மாதம், 13,000 டன் கோதுமை வழங்கப்பட்டது. இது, கடந்த ஆண்டில் வெகுவாக குறைக்கப் பட்டது.
இதனால், கார்டுதாரர்களுக்கு, 2 கிலோ கூட வழங்க முடியவில்லை. பின், 8,500 டன் கோதுமை வழங்கப்பட்டது. தமிழகத்திற்கான கோதுமையை உயர்த்தி வழங்குமாறு, மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, செயலர் ராதாகிருஷ்ணன், உணவு வழங்கல் துறை இயக்குனர் மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் டில்லி சென்று, மத்திய உணவு துறை அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தினர்.
சமீபத்தில் சென்னை வந்த மத்திய உணவு துறை செயலர் சஞ்சீவ் சோப்ராவிடம், இதே கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை, மாதம் 8,500 டன்னில் இருந்து, 17,100 டன்னாக அதிகரித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது அடுத்த மாதம், 24ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.