'பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை தொகை ரூ.2,000'
'பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை தொகை ரூ.2,000'
ADDED : பிப் 17, 2025 12:25 AM

பெண்ணாடம்: ஊழல் குறித்த, 'தி.மு.க., பைல்ஸ் - 3' விரைவில் வெளியாக போகிறது என, பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் பேசினார்.
பெண்ணாடத்தில், கடலுார் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மத்திய அரசு, தமிழகத்திற்கு தேவையான நிதி தரவில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். மத்தியில் இருந்து நிதி கிடைக்காமல் இருந்தால், இங்கு எப்படி ஆட்சி நடத்த முடியும்?
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, மத்திய அரசு 43,000 கோடி ரூபாயை ஒரே தவணையில் வழங்கி உள்ளது. அந்த நிதி எங்கே?
மயிலாடுதுறையில் இரு இளைஞர்கள், கள்ளச்சாராய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியதால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; இது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில், இன்னும் கள்ளச்சாராய விற்பனை நடக்கிறது என்பதற்கு மயிலாடுதுறை சம்பவமே உதாரணம். போதைப் பொருள் விற்பனையும் தங்கு தடையின்றி உள்ளது. பள்ளி, கல்லுாரி வாசலில், அமோகமாக வியாபாரம் நடக்கிறது.
போலீஸ் பெண் உயர் அதிகாரி ஒருவர், தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என புகார் அளித்துள்ளார். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா?
வரும் 2026, தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால், மகளிர் உரிமை தொகை 2,000 ஆக உயர்த்தி கொடுக்கப்படும். ஊழல் குறித்த, 'தி.மு.க., பைல்ஸ் - 3' விரைவில் வெளியாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.

