ரயில் நிலையங்களில் 'சார்ஜிங்' வசதி மின்சார வாகனங்களுக்கு எப்போது?
ரயில் நிலையங்களில் 'சார்ஜிங்' வசதி மின்சார வாகனங்களுக்கு எப்போது?
ADDED : நவ 21, 2024 01:07 AM

சென்னை:மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், முக்கியமான ரயில் நிலையங்களில், 'சார்ஜிங்' வசதி இல்லை; இதனால், மின்சார வாகனங்களில் செல்லும் பயணியர் அவதிப்படுகின்றனர்.
பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிரிக்க, மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. இதனால், மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
அதிகரிக்கும்
தமிழகத்தில், 2.40 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. இருப்பினும், ரயில் நிலையங்களில் இன்னும் போதிய அளவில், 'பேட்டரி சார்ஜிங்' வசதி இல்லாத நிலை உள்ளது.
இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
சமீப காலமாக, மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகமாகி வருகின்றன. அடுத்த சில ஆண்டுகளில், இது மேலும் அதிகரிக்கும்.
எனவே, பயணியர் அதிகளவில் வந்து செல்லும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில், பேட்டரி சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
சென்னையில் வேளச்சேரி உள்ளிட்ட சில ரயில் நிலையங்களில், தற்போதுள்ள பேட்டரி சார்ஜிங் வசதியும், முழு அளவில் செயல்படாமல் உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
திட்டம்
தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
முதல் கட்டமாக, சென்னையில் 28 ரயில் நிலையங்களில் பேட்டரி சார்ஜிங் மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. அதில், பரங்கிமலை, சைதாப்பேட்டை, பேசின்பிரிட்ஜ், அம்பத்துார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில், இது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
அதேபோல், பிற நகரங்களிலும் படிப்படியாக இந்த வசதியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.