தகவல் ஆணையர்கள் நியமனம் எப்போது? ஓராண்டாக அரசிடம் காத்திருக்கும் பட்டியல்!
தகவல் ஆணையர்கள் நியமனம் எப்போது? ஓராண்டாக அரசிடம் காத்திருக்கும் பட்டியல்!
ADDED : மார் 21, 2025 12:30 AM
சென்னை:அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய, தகவல் அறியும் உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, அரசு நிர்வாக பணிகள் குறித்த தகவல்களை, பொது அலுவலர்கள் வாயிலாக பெறலாம்.
இதற்கான மனுக்கள் மீது பொது தகவல் அலுவலர்கள், 30 நாட்களில் முடிவு எடுக்க வேண்டும். தவறினால், அந்தந்த துறை மேலதிகாரிகளிடம் மேல் முறையீடு செய்யலாம்.
அதிலும், உரிய தகவல் கிடைக்காத நிலையில், மாநில தகவல் ஆணையத்தில், மனுதாரர்கள் இரண்டாவது மேல் முறையீடு செய்யலாம். இந்த இரண்டாவது மேல் முறையீடு மனுக்களை விசாரிக்க, மாநில தகவல் ஆணையத்தில், ஒரு தலைமை தகவல் ஆணையர், ஆறு தகவல் ஆணையர் பதவிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், தமிழக தகவல் ஆணையத்தில், ஒரு தலைமை தகவல் ஆணையர், நான்கு தகவல் ஆணையர்கள் மட்டுமே உள்ளனர்.
காலியாக உள்ள இரண்டு தகவல் ஆணையர் பதவிகளை நிரப்ப, ஓய்வுபெற்ற நீதிபதி கே.பி.கே.வாசுகி தலைமையில் தேர்வு குழு அமைத்து, தமிழக அரசு கடந்த ஆண்டு ஜன., 22ல் உத்தரவிட்டது.
இந்த தேர்வு குழுவில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜோதி ஜெகராஜன், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கந்தசாமி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இக்குழுவினர் விண்ணப்பங்களை பெற்று, பரிசீலனை பணிகளை முடித்துள்ளனர்.
இதுகுறித்து, தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் கூறியதாவது:
இரண்டு தகவல் ஆணையர் பதவிகளுக்கும் உரிய நபர்களின் பட்டியலை தயாரித்து, அரசுக்கு தேர்வு குழு பரிந்துரைத்தது.
தகவல் அறியும் உரிமை சட்டப்படி, தேர்வுக் குழு அனுப்பும் பட்டியலை, முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், சபாநாயகர் ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு செய்து, தேர்தெடுக்கப்பட்ட நபர்கள் பட்டியலை இறுதி செய்து, கவர்னருக்கு அனுப்ப வேண்டும்.
அதன் அடிப்படையில், புதிய தகவல் ஆணையர்களை நியமிக்கும் அறிவிப்பு வெளியாகும். இதில் தேர்வுக்குழு தயாரித்த பட்டியல், முதல்வர் தலைமையிலான குழுவின் ஒப்புதலுக்காக, ஓராண்டுக்கு மேலாக காத்திருக்கிறது.
உரிய காலத்தில், புதிய தகவல் ஆணையர்கள் நியமிக்கப்படாததால், தகவல் ஆணையத்தில் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்கள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுஉள்ளது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.