முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை: அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்
முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை: அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்
ADDED : ஜன 27, 2025 01:35 AM

சென்னை: 'டாவோஸ் நகரில் நடந்த மாநாட்டில் பெறப்பட்ட, முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எவ்வளவு என்பது குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
சுவிட்சர்லாந்து நாட்டில், டாவோஸ் நகரில், உலகப் பொருளாதார அமைப்பின், 2025ம் ஆண்டுக்கான கூட்டம் நடந்தது. உலக அளவிலான வணிக நிறுவனங்களின் தலைவர்களும், அரசு துறையை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் இந்தியாவை சேர்ந்த, பல்வேறு மாநிலங்களும் பங்கேற்றன. தமிழகம் சார்பில், அமைச்சர் ராஜா பங்கேற்றார். மகாராஷ்டிரா, உத்தரபிரசேதம், ஆந்திரா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள், பெருமளவு முதலீட்டை ஈர்க்க, புரிந்துணர்வு ஒப்பந்தகங்கள் கையெழுத்தானதாக, செய்திகள் வந்துள்ளன.
ஆனால், தமிழகத்திற்கு எவ்வளவு முதலீடுகளை ஈர்க்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார் என்ற விபரம் தெரியவில்லை.
தி.மு.க., முதல்வர் ஸ்டாலின், தமிழகத்திற்கு பலரும் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்ய, விருப்பம் தெரிவித்து வருவதாகக் கூறுவதில், எந்தவித உண்மையும் இல்லை என்பதையே இது காட்டுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் நடத்திய, உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்த்த முதலீடு எவ்வளவு என, ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்டார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் தி.மு.க., ஆட்சியில், உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தியும், நான்கு முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு; தற்போது டாவோஸ் மாநாட்டில் பெறப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எவ்வளவு; இதுவரை பெறப்பட்ட முதலீடுகள் எவ்வளவு என்பது குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

