PUBLISHED ON : மார் 07, 2024 12:00 AM

'துணை முதல்வர் பதவி பறிபோனதில் இருந்து ரொம்பவே விரக்தி அடைந்துள்ளார் போலிருக்கிறது...' என, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் பற்றி கூறுகின்றனர், சக அரசியல்வாதிகள்.
பீஹாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தார், நிதீஷ். அப்போது, தேஜஸ்வி துணை முதல்வராக இருந்தார்.
பீஹார் அரசியலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், தேஜஸ்வியின் துணை முதல்வர் பறிபோனது; இது, அவரை ரொம்பவே காயப்படுத்தி உள்ளது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய தேஜஸ்வி, 'நிதீஷ் குமார், ராமாயணத்தில் வரும் தசரதன் போன்றவர். தன் மகனை வனவாசத்துக்கு அனுப்பி வைத்தார், தசரதன். அதுபோலவே நிதீஷ் குமாரும், தன்னை நம்பி வந்தவர்களை நடுத்தெருவில் நிறுத்தி விட்டார்.
'ராமாயணத்தில், தசரதனின் மனதில் விஷம் விதைத்த கைகேயி போல், நிதீஷ் குமார் விஷயத்திலும் சில கைகேயிகள் உள்ளனர். அவர்களை காலம், வெளிச்சத்துக்கு கொண்டு வரும்...' என, 'பொடி' வைத்து பேசினார்.
இதைக் கேட்ட பீஹார் அரசியல்வாதிகள், 'பதவி பறிபோன சோகத்தில், தசரதன், கைகேயி என ஏதேதோ உளறுகிறார், தேஜஸ்வி. அவருக்கு தெரிந்தால், கைகேயி யார் என்று வெளிப்படையாக சொல்ல வேண்டியது தானே...' என, ஆதங்கப்படுகின்றனர்.