பா.ம.க., பெயர், கொடி, சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷனை அணுக ராமதாஸ் முடிவு
பா.ம.க., பெயர், கொடி, சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷனை அணுக ராமதாஸ் முடிவு
ADDED : செப் 13, 2025 04:07 AM

சென்னை : பா.ம.க., பெயர், கொடி, சின்னத்தை அன்புமணி தரப்பு பயன்படுத்துவதற்கு, தடை விதிக்கக் கோரி, தேர்தல் கமிஷனை அணுக ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரி வித்தனர்.
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையே, கடந்த எட்டு மாதங்களுக்கு மேல் மோதல் நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கினார்.
மேலும், 'பா.ம.க., கட்சியின் பெயர், கொடி, சின்னத்தை அன்புமணி பயன்படுத்தக்கூடாது; வேண்டுமானால் அவர் தனிக்கட்சி துவங்கட்டும்' என, மகனுக்கு ராமதாஸ் ஆலோசனை வழங்கினார்.
ஆனால், அன்புமணி தரப்பில், இதுகுறித்து பதிலளித்த அவரது ஆதரவாளரான செய்தித் தொடர்பாளர் பாலு, 'பா.ம.க., பொ துக்குழுவால், கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அன்புமணி. அவரது பதவி காலம் வரும் 2026 ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டதை, தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது.
'எனவே, அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை. கட்சியின் பெயர், கொடி, சின்னம் அனைத்தும் அன்புமணியிடம் தான் உள்ளது. எனவே, நாங்கள் இதற்காக தேர்தல் கமிஷனை அணுக தேவையில்லை,' என்றார்.
தற்போதைய சூழ்நிலையில் பா.ம.க., பெயர், கொடி, சின்னத்தை, இரு தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். பொதுச்செயலர், பொருளாளர், மாவட்டச் செயலர்கள் என இரு தரப்பிலும் வெவ்வேறு நபர்களை நியமித்துள்ளனர். இதனால், கட்சியினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பா.ம.க., பெயர், கொடி, சின்னத்தை, அன்புமணி தரப்பு பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி, தலைமை தேர்தல் கமிஷனில் மனு கொடுக்க ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக, ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகள் கூறுகையில், 'கட்சி தன்னிடம் இருக்க வேண்டும் என்பதில் ராமதாஸ் உறுதியாக இருக்கிறார்.
'ஆனால், அன்புமணி தரப்பினர், ராமதாஸ் படத்தையும் பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு தடை கோரி, தேர்தல் கமிஷன் மற்றும் நீதிமன்றத்தை அணுக ராமதாஸ் முடிவு செய்துள்ளார்' என்றனர்.