ADDED : செப் 26, 2025 08:05 PM
சென்னை:புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம், டில்லியில் யு.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடந்தது.
தமிழக காவல் துறை தலைவர் மற்றும் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யாக இருந்த சங்கர் ஜிவால், ஆக., 31ல் ஓய்வு பெற்றார். இதையடுத்து, பொறுப்பு டி.ஜி.பி.,யாக வெங்கட்ராமனை நியமனம் செய்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதற்கிடையே, புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சீமா அகர்வால் உள்ளிட்ட எட்டு பேர் அடங்கிய பட்டியல், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது .
அப்பட்டியலில் உள்ள மூன்று பேரை இறுதி செய்வதற்கான ஆலோசனை கூட்டம், டில்லியில் உள்ள மத்திய பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி., அலுவலகத்தில், அதன் தலைவர் அஜய்குமார் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், தமிழக அரசின் தலைமை செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார் மற்றும் பொறுப்பு டி.பி.ஜி., வெங்கட்ராமன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் தேர்வு செய்யப்படுபவர், புதிய டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட உள்ளார்.