யாருடைய குரலாக ஒலிக்கிறார் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்? பா.ம.க., அன்புமணி கேள்வி
யாருடைய குரலாக ஒலிக்கிறார் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்? பா.ம.க., அன்புமணி கேள்வி
UPDATED : அக் 28, 2026 06:02 PM
ADDED : அக் 28, 2026 05:58 PM
சென்னை: ‘சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவ், யாருடைய குரலாக ஒலிக்கிறார்’ என, பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
‘திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில், நுரை பெருக்கெடுப்பதற்கு, சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடுதான் காரணம்’ என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவ் கூறியிருப்பது, அதிர்ச்சி தருகிறது.
நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில், நுரை பொங்கி வர, கழிவுகள் கலப்பது தான் காரணம் என்பது, சிறு குழந்தைகளும் அறிந்ததே. கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில், சாயப்பட்டறை கழிவுகள், நொய்யல் ஆற்றில் கட்டுப்பாடின்றி கலக்க விடுவது தான், நுரை பெருக்கெடுக்க காரணம். தென்பெண்ணை ஆற்றில், கெலவரப்பள்ளி அணையில், நுரை பெருக்கெடுக்க காரணம், கர்நாடகாவில் இருந்து கலக்கவிடப்படும் கழிவுகள் தான்.
அந்த ஆறுகளை, துாய்மைப்படுத்தும் பொறுப்பில் உள்ள அமைச்சரே, இவ்வாறு கூறியிருப்பது அதிர்ச்சி தருகிறது. திருப்பூர், காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில், சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை ஆய்வு செய்த அவர், திருப்பூரில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்கள் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டி உள்ளார். சாய ஆலை உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். இதையெல்லாம் பார்க்கும்போது தான், அமைச்சர் யாருடைய குரலாக ஒலிக்கிறார் என்ற அச்சம் ஏற்படுகிறது.
இத்தகைய சூழலில், தமிழக நீர் நிலைகளில், கழிவுகள் கலப்பதை தடுக்க, அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
