ADDED : நவ 18, 2024 01:09 AM
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:
நடிகை கஸ்துாரி பேசியதில் காயம் பட்டதாக சொல்கின்றனர். தமிழ் பேரினத்தை நுாற்றாண்டு காலமாக திராவிடம் என சொல்லி வரும்போது, அதனால் நாங்கள் எவ்வளவு காயம்பட்டு இருப்போம். அடையாளத்தை மறைத்து என் இனத்துக்கு வேறு பெயர் வைக்க திராவிட இயக்கத்தைச் சேர்ந்தோருக்கும் என்ன உரிமை உள்ளது?
தீவிரவாதியைப் பிடிப்பது போல தனிப்படை அமைத்து, ஹைதராபாதுக்குச் சென்று நடிகை கஸ்துாரியை கைது செய்யும் அளவுக்கு, அவர் செய்த தவறு என்ன? மன்னிப்பு கேட்ட பின்பும், அவரை சிறைப்படுத்துவது அநியாயம்.
ஒவ்வொரு விஷயத்துக்கும் கருத்தியல் ரீதியில் சண்டை போடலாம். ஆனால், தி.மு.க., எல்லா விஷயத்தையும் அரசியல் மோதலாகவே பார்க்கிறது. எவ்வளவோ பேரை தி.மு.க.,வினர் தனிப்பட்ட முறையில் விமர்சித்துள்ளனர். குடும்பங்களை பற்றி மோசமாகப் பேசி உள்ளனர். தாய், தந்தையர் குறித்து கேவலமாக பேசி இருக்கின்றனர். அதற்கெல்லாம் யார் நடவடிக்கை எடுப்பது?
நாட்டில் மலையை வெட்டி விற்றவன், விற்றுக் கொண்டிருப்பவன், மண்ணை அள்ளி திண்பவன், ஊழல் லஞ்சத்தில் ஊறி திளைப்பவன், பெண்களை வன்கொடுமை செய்து கொலை செய்பவன், கொள்ளை அடிப்பவன் யாரையும் கைது செய்வதில்லை. அனைவரும் வெளியில் தான் சுற்றிக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.