ஜி.எஸ்.டி., மறுசீரமைப்புக்கு 8 ஆண்டுகள் ஆனது ஏன்?
ஜி.எஸ்.டி., மறுசீரமைப்புக்கு 8 ஆண்டுகள் ஆனது ஏன்?
UPDATED : ஆக 28, 2025 07:30 AM
ADDED : ஆக 28, 2025 02:28 AM

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி., 2.0 மறுசீரமைப்பு, தீபாவளி பரிசாக மக்களுக்கு வழங்கப்பட உள்ளன. தற்போதைய 5%, 12%, 18%, 28% என்ற நான்கு வரி அடுக்குகள், 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்குகளாகக் குறைக்கப்பட உள்ளன.
புகையிலை, மது போன்ற பாவப் பொருட்களுக்கு மட்டும் 40% வரி விதிக்கப்படும். இந்த எளிமைப்படுத்தல், 2017-ல் அறிமுகமான ஜி.எஸ்.டி.யின் எட்டு ஆண்டு அனுபவத்தின் தொடர்ச்சியாகும். ஆனால், இந்த சீரமைப்புக்கு ஏன் எட்டு ஆண்டுகள் ஆனது என்ற கேள்வி முக்கியமாக எழுகிறது.
வாட், சேவை வரி, கலால் வரி, செஸ் உள்ளிட்ட பல்வேறு வரிகளை ஒருங்கிணைத்து, கடந்த 2017-ல் அறிமுகமான ஜி.எஸ்.டி., 'ஒரே நாடு, ஒரே வரி' என்ற கொள்கையை அமல்படுத்தியது. இதற்கு முன், மாநில எல்லைகளில் இருந்த சோதனைச் சாவடிகளால், சரக்கு வாகனங்கள் போய்ச் சேர 15--20 நாட்கள் தாமதமாகின.
இவை ஜி.எஸ்.டி., வாயிலாக நீக்கப்பட்டு, பொருட்கள் மற்றும் சேவைகளின் போக்குவரத்து எளிதானது. ஆனால், வரி வகைப்பாடு மற்றும் ஏய்ப்பு வழக்குகள் போன்ற சவால்கள் தொடர்ந்தன. உதாரணமாக, சிம் கார்டு பொருளா, சேவையா என்பது தொடர்பான வழக்கு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நடைபெற்றது.
எட்டு ஆண்டுகள் ஏன்?
ஜி.எஸ்.டி., அறிமுகமானபோது, முதல் ஐந்து ஆண்டுகளுக்கு, மாநிலங்களுக்கு வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடுசெய்யும் என்று உறுதியளிக்கப்பட்டது. இது மாநிலங்களின் நம்பிக்கையைப் பெறவும்; கூட்டாட்சி அமைப்பில் சமரசத்தை உருவாக்கவும் அவசியமாக இருந்தது. 2021ல், ஜி.எஸ்.டி., சீரமைப்புக்காக அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு, பொருட்கள் மற்றும் சேவைகளின் வரி விகிதங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டன. இதன் வாயிலாக, ஆயிரக்கணக்கான பொருட்களின் வரி விகிதங்கள் படிப்படியாக மாற்றப்பட்டன.
ஜி.எஸ்.டி.யின் நான்கு அடுக்குகள் (5%, 12%, 18%, 28%) 15.50% என்ற சராசரி வரி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஒற்றை வரி விகிதம் அமல்படுத்தப்பட்டால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
அதேநேரம், சொகுசுப் பொருட்களுக்கு வரி குறைந்தால், பணக்காரர்கள் பயனடைவர். இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பும். இதைத் தவிர்க்கவே பல அடுக்குகள் உருவாக்கப்பட்டன.
ஆனால், இந்த அடுக்குகளை எளிமைப்படுத்துவதற்கு முன், வருவாய் நிலைத்தன்மை, மாநிலங்களின் ஒப்புதல் மற்றும் வணிகர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிப்ப
து ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதற்கு எட்டு ஆண்டுகள் தேவைப்பட்டன.எனவே, ஜி.எஸ்.டி., விகிதங்களில் சீர்திருத்தம் என்பது திடீரென மத்திய அரசு எடுத்த முடிவல்ல; கடந்த எட்டு ஆண்டுகளின் வரி சீர்திருத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியே.ஜி.எஸ்.டி., 2.0: மாற்றங்கள் ஜி.எஸ்.டி., 2.0-இல், 12% மற்றும் 28% அடுக்குகள் நீக்கப்பட்டு, பொருட்கள் மற்றும் சேவைகள் 5% அல்லது 18% விகிதங்களில் வகைப்படுத்தப்பட உள்ளன. இது நுகர்வோருக்கு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை குறைப்பு மற்றும் எளிமையான வரி முறையை வழங்கும். ஆனால், பொருட்களை வகைப்படுத்துவதில் சிக்கல்கள் மற்றும் மத்திய--மாநில முரண்பாடுகள் தொடரலாம்.
பொருட்களை வகைப்படுத்துவதில் அவ்வப்போது ஏற்படும் சிக்கலை, ஜி.எஸ்.டி.,யின் சிக்கலாக பேசுவதும் நடந்திருக்கிறது. இனிப்பு பாப்கார்னுக்கு கூடுதல் வரி என்ற பெருங்கூச்சல் வெளிப்பட்டது இந்த ரகம்.கேரமல் சாக்லெட் இணைந்த பாப்கார்னை எதில் வகைப்படுத்துவது என்ற சிக்கலில், சாக்லெட் ரகமாக கருதப்பட்ட சிக்கல் அது. இதுபோல, தற்போது, 14,000-க்கும் மேற்பட்ட ஜி.எஸ்.டி., ஏய்ப்பு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன, இது வரி அமலாக்கத்தில் நம்பிக்கைக் குறைபாட்டைக் காட்டுகிறது.
ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டங்களில், அந்தந்த மாநிலங்களின் முக்கிய தொழில்களுக்கும், தயாரிப்புகளுக்கும் ஜி.எஸ்.டி., விகிதத்தை குறைக்க மாநில அமைச்சர்கள் அழுத்தம் அளிப்பர்.உதாரணமாக, குஜராத் - வைரம், தமிழகம் - ஜவுளி, கர்நாடகா - தகவல் தொழில்நுட்பம் என வரி குறைக்க வாதிடுவர். எனினும், பெரும்பான்மை கருத்து அடிப்படையில், ஏராளமான பொருட்கள், சேவைகளின் வரி குறைக்கப்பட்டு வந்திருக்கிறது.பரிணாம வளர்ச்சி தொடரும்
ஜி.எஸ்.டி., 2.0 சீர்திருத்தங்கள், எட்டு ஆண்டு கால அனுபவத்தின் விளைவாகவும், மத்திய--மாநில அரசுகளின் ஆலோசனைகளின் தொடர்ச்சியாகவும் அமைகின்றன. முதல் ஐந்து ஆண்டுகளில் மாநில வருவாய் இழப்பு ஈடுசெய்யப்பட்டு, பின்னர் சீரமைப்பு குழு வாயிலாக வரி விகிதங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டன.
இந்த மாற்றங்கள் நுகர்வோருக்கு பயனளிக்கும் என்றாலும், புதிய பொருட்கள் மற்றும் சந்தை மாற்றங்கள் காரணமாக, வரி முறையில் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி நிகழும். எட்டு ஆண்டுகள் என்பது, கூட்டாட்சி அமைப்பில், ஒருமித்த கருத்து மற்றும் வருவாய் நிலைத்தன்மையை உறுதி செய்யத் தேவையான காலமாகும். எனவே, ஜி.எஸ்.டி., 3.0ல் ஒரே வரி விகிதம் என்றோ, இப்போது வரவிருக்கும் இரண்டு அடுக்குகள் மீண்டும் 4, 5 என்றோ மாறாது என்று கூறுவதற்கில்லை.