ADDED : அக் 19, 2025 02:07 AM

சென்னை: 'தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன், தமிழகத்தின் கடன் சுமையை குறைப்போம் என்று கூறி, ஆட்சிக்கு வந்த கடந்த நான்கு ஆண்டுகளில், 5 லட்சம் கோடி ரூபாய் புதிய கடன் வாங்கியது ஏன்?' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை 6 கேள்வி எழுப்பியுள்ளார். அவரது அறிக்கை:
எப்போதெல்லாம் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும், தி.மு.க., அசிங்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் ஒரு திரைப்படத்தில் வரும் வடிவேலு காமெடியை போல, ஹிந்தி எதிர்ப்பு அல்லது, மத்திய அரசு வஞ்சிக்கிறது என்ற பெட்டியை திறப்பது வழக்கம்.
ஊழலை பற்றி பேச தி.மு.க.,வுக்கு என்ன தகுதி இருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் சுதந்திர போராட்ட வீரர்கள், தலைவர்களை புறக்கணித்து விட்டு, தன் தந்தை பெயரையும், சிலையையும் வைப்பதை விடவா ஆணவம் வந்துவிட போகிறது?
அண்ணாமலையின் ஆறு கேள்விகள்
1 கடந்த, 2023 - 24ம் ஆண்டு சி.ஏ.ஜி., அறிக்கையின்படி, 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட, 14,808 கோடி ரூபாய் நிதி செலவிடப்படாமல் வீணாக்கியது ஏன்?
2 அந்த ஆண்டு மக்களிடம் வசூலிக்கப்பட்ட மின்சார வரி, 1,985 கோடி ரூபாய். இதில், 507 கோடி ரூபாயை மின் வாரியம் ஒருங்கிணைந்த நிதிக்கு செலுத்தாமல் மடைமாற்றியது ஏன்?
3 கடந்த 2021 - 22 முதல், 2023 - 24 வரை மூன்று ஆண்டுகளில், மத்திய அரசிடம் பெற்ற ஜி.எஸ்.டி., இழப்பீடு தொகையான, 28,024 கோடி ரூபாயில், 10 சதவீதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது மாநில திட்டக்குழுவின் பரிந்துரை . ஆனால், வழங்கப்படவில்லை ஏன்?
4 மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவதற்காக, 511 வாக்குறுதிகளை கொடுத்தீர்கள். இவையன்றி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி தனியாக தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தது தி.மு.க.,; 10 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாமல், 2026 தேர்தலை சந்திக்க வெட்கமாக இல்லையா?
5 ஆட்சிக்கு வருவதற்கு முன், தமிழகத்தின் கடன் சுமையை குறைப்போம் என்று கூறி, கடந்த நான்கு ஆண்டுகளில், 5 லட்சம் கோடி ரூபாய் புதிய கடன் வாங்கியது ஏன்?
6 தமிழகத்தில், மத்திய அரசின் திட்டங்களில் நடக்கும் ஊழல்களை ஊக்குவிக்கும் விதமாக, தி.மு.க., அரசு கள்ள மவுனத்தில் இருப்பது ஏன்?
இவற்றுக்கு பதில் அளிக்க முதல்வர் ஸ்டாலினுக்கு திராணி இருக்கிறதா?
அடுத்த முறை நீதிமன்றத்திலோ, மக்கள் மன்றத்திலோ தி.மு.க., அசிங்கப்படும்போது, 60 ஆண்டு கால பழைய மடைமாற்ற கதைகளை கொண்டு வராமல், புதிதாக சிந்தித்து வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.