கோர்ட் வளாகத்தில் கொலையை தடுக்காதது ஏன்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
கோர்ட் வளாகத்தில் கொலையை தடுக்காதது ஏன்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
ADDED : டிச 20, 2024 05:50 PM

சென்னை: நெல்லை மாவட்ட கோர்ட் அருகே நடந்த கொலையை தடுக்காதது ஏன் என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
கொலை வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக நெல்லை நீதிமன்றத்திற்கு, கீழ்நத்தம் கிராமத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் மாயாண்டி(38) வந்தார். அப்போது, நீதிமன்றம் அருகே அவரை காரில் வந்த நான்கு பேர் கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.
இது தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அப்போது, நீதிபதி, '' நீதிமன்ற வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தபோது கொலை நடந்துள்ளது. இக்கொலையை ஏன் போலீசார் தடுக்கவில்லை. மாவட்ட நீதிமன்றங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டும் இன்னும் வழங்காதது ஏன்?'' எனக்கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், '' நீதிமன்ற வளாகத்தில் இருந்து 100 மீ., தொலைவில் கொலை நடந்தது. முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்துள்ளது. சம்பவ இடத்தில் குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார், '' என விளக்கம் அளித்தார்.
இதனையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலை குறித்தும், நீதிமன்றங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்தும் அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.