ADDED : செப் 27, 2024 02:00 AM
சென்னை:போலீஸ் தரப்பில் கேட்கும் விபரங்களை அளிக்கும்படி, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி கோரியவர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
விஜயதசமியை ஒட்டி, தமிழகம் முழுதும், 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
இதற்கு அனுமதி அளிக்கக்கோரி, அந்தந்த மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்கள் சார்பில், போலீசாருக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
எந்த நடவடிக்கையும் இல்லாததால், உயர் நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இம்மனுக்கள், நீதிபதி ஜெயச்சந்திரன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
மனுதாரர்கள் தரப்பில், 'நீதிமன்றம் வகுத்த வழிமுறைகளுக்கு உட்பட்டு தான் அனுமதி கேட்டுள்ளோம்.
'ஒரே காரணத்தை கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் அணிவகுப்பு நடத்தப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது' என்றனர்.
போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஊர்வலத்துக்கான மாற்று தேதி, மாற்று வழித்தடம் பல இடங்களில் குறிப்பிடப்படவில்லை. அணிவகுப்பு துவங்கும் இடம், முடியும் இடம், எவ்வளவு பேர் பங்கேற்பர், யார் தலைமையில் நடக்கிறது என்ற விபரங்களும் இல்லை.
'நீதிமன்றம் வகுத்த வழிமுறைகளின்படி, கூடுதல் விபரங்களை அளிக்கும்பட்சத்தில் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்' என்றார்.
இதையடுத்து, போலீஸ் தரப்பில் கேட்கும் விபரங்களை அளிப்பதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, 'நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து, போலீஸ் அதிகாரிகள் விவாதித்திருக்க வேண்டும்' எனக் கூறிய நீதிபதி, இன்றுமுதல் விபரங்களை அளிக்கும்படி மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 30க்கு தள்ளி வைத்தார்.

