கனிமவள கொள்ளை விவகாரத்தில் மேற்படி நடவடிக்கை ஏன் இல்லை?
கனிமவள கொள்ளை விவகாரத்தில் மேற்படி நடவடிக்கை ஏன் இல்லை?
ADDED : பிப் 20, 2025 01:06 AM
விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் நடந்த கனிமவளக் கொள்ளையில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தொடர் நடவடிக்கையை தீவிரப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரத்தில் ஜன., 28ல் ஜவுளி பூங்கா அமையவுள்ள இடத்திற்கு அருகே உள்ள பெரியகுளம் கண்மாயில் சட்டவிரோதமாக கிராவல் மணல் திருட்டில் ஈடுபட்ட 12 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதில் சாத்துார் வேப்பிலைப்பட்டியை சேர்ந்த சிவரஞ்சனி என்பவர் மீது வழக்கு பதியப்பட்டது.
இதில் கனிமவளக் கொள்ளையை தடுக்கத் தவறியதாக சாத்துார் தாசில்தார் ராமநாதன் உள்ளிட்ட 5 வருவாய்த்துறையினரும், நீர்வளத்துறை உதவிப் பொறியாளர், வேளாண் உதவி அலுவலர் முத்துக்குரு உள்ளிட்ட, 7 பேரை 'சஸ்பெண்ட்' செய்து, கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.
இதில் வேளாண் உதவி அலுவலர் முத்துக்குரு சஸ்பென்ஷன் ரத்து செய்யப்பட்டது.
மொத்தம், 500 கியூபிக் மீட்டர் மட்டுமே அள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 5,000 கியூபிக் மீட்டர் வரை திருடி உள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் டி.ஆர்.ஓ., தலைமையிலான முதற்கட்ட விசாரணையில், குற்றம் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்த 12 லாரிகளில், 8 லாரிகள் மாயமான நிலையில், தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக மீண்டும் ஸ்டேஷனுக்கு வந்தன. இதுகுறித்த விசாரணையில் மாவட்ட நிர்வாகமும் சொதப்பி வருகிறது.
தனக்கும் இதற்கும் தொடர்பில்லை என சிவரஞ்சனி, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். வச்சக்காரப்பட்டியில் பதிவு செய்த எப்.ஐ.ஆர்., எண் 45ல், விருதுநகர் கோர்ட்டில் சிலர் முன் ஜாமின் பெற்றுள்ளனர்.
இதில், சிவரஞ்சனி பெயர் இல்லை. வழக்கில் பெயர் இல்லாதவர்களே பெற்றுள்ளனர். இது பற்றி முழுவீச்சிலான விசாரணையை மாவட்ட நிர்வாகம் தற்போது வரை முடுக்கிவிடவில்லை.
ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக பல விஷயங்கள் மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் அதிகாரியை தள்ளிவிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இன்னொரு பக்கம் வருவாய் துறை அலுவலர் சங்கத்தினரின் காத்திருப்பு போராட்டம் தீவிரமாகி வருகிறது.
கொள்ளை நடந்திருப்பது உறுதியான நிலையில், கொள்ளையர்கள் மீதான நடவடிக்கை எதுவும் இல்லை என்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

