முதல்வர் அறையில் முடிக்கக்கூடிய வேலைக்கு ஐரோப்பிய பயணம் எதற்கு: பா.ஜ., கேள்வி
முதல்வர் அறையில் முடிக்கக்கூடிய வேலைக்கு ஐரோப்பிய பயணம் எதற்கு: பா.ஜ., கேள்வி
ADDED : செப் 02, 2025 02:07 AM
சென்னை: 'ஜெர்மனியில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களும், தமிழகத்தில் ஏற்கனவே பல ஆண்டுகளாக இயங்கி வரும் நிலையில், ஒரே நாளில் முதல்வர் அறையிலேயே முடித்திருக்கக்கூடிய காரியத்திற்கு, 10 நாள் ஐரோப்பிய பயணம் எதற்கு' என, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
ஜெர்மனியில் மூன்று நிறுவனங்களுடன், 3,200 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்ட செய்தி, பெருத்த ஏமாற்றத்தையும், வலுவான சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களும், தமிழகத்தில் ஏற்கனவே பல ஆண்டுகளாக இயங்கி வரும் நிலையில், மாநில முதல்வர் இங்கிருக்கும் பணிகளை விட்டு விட்டு, வெளிநாட்டிற்கு சென்று, ஒரு படாடோப நாடகம் நடத்த வேண்டிய தேவை என்ன? ஒரே நாளில் முதல்வர் அறையிலேயே முடித்திருக்கக்கூடிய காரியத்திற்கு, 10 நாள் ஐரோப்பிய பயணம் எதற்கு?
அதிலும், தமிழகம் போன்ற ஒரு அதிகப்படியான பொருளாதார வளர்ச்சி உடைய மாநிலத்திற்கு, 3,200 கோடி ரூபாய் முதலீடு என்பது, யானை பசிக்கு சோளப்பொரியே. கடந்த 2024ல் ஒரே ஒரு முறை வெளிநாட்டிற்கு பயணம் செய்த மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், 15 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை, தன் மாநிலத்திற்கு ஈர்த்து வந்தார்.
அதேபோல், தான் வெளிநாடுகளுக்கு செல்லாமலேயே, அமைச்சர்களை மட்டும் அனுப்பி, 7 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் ஈர்த்தார்.
தமிழக முதல்வரோ, ஆறு முறை உலகத்தை சுற்றி வந்து, சொற்ப தொகையான 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை மட்டுமே ஈர்த்துள்ளார். அவற்றிலும் இன்று வரை, 95 சதவீத ஒப்பந்தங்கள் வெறும் காகித அளவிலேயே நின்றுவிட்டன. ஆக, இது முதலீடு எனும் பெயரில், மக்கள் பணத்தில் தி.மு.க., அரசு நடத்தும் மோசடி விளையாட்டல்லவா.
இப்போதாவது இதற்கு வாய் திறக்குமா விளம்பர மாடல் அரசு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அவரது மற்றொரு அறிக்கையில், 'தமிழகத்தில் அனைத்து மாணவர்களின் கல்விக் கடனும் ரத்து செய்யப்படும் என்று சொன்னீர்களே, செஞ்சீங்களா முதல்வர் ஸ்டாலின்' என கேட்டுள்ளார்.