கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்!
கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்!
ADDED : ஜூன் 10, 2025 01:41 PM

சென்னை: கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று தமிழக அரசு குற்றம்சாட்டி வரும் நிலையில், ''இன்னும் கொஞ்சம் அறிவியல் பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகரிக்க முடியும்''என மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார்.
சிவங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா, கீழடியில், 2014 முதல் இந்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. அது பற்றிய, 982 பக்க விரிவான ஆய்வறிக்கையை, இந்திய தொல்லியல் துறை இயக்குநரிடம், தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன், கடந்த 2023 ஜனவரியில் சமர்ப்பித்தார்.
அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி ஆய்வறிக்கையை, இந்திய தொல்லியல் துறை திருப்பி அனுப்பியுள்ளது. அதில் சில நுட்பமான விபரங்களுடன் திருத்தங்களைச் செய்து, மீண்டும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளது. இதற்கு தி.மு.க., மார்க்சிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தமிழர்களின் தொன்மையை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் கூறியதாவது: கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல்பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் வேண்டும்.
அறிவியல் பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகரிக்க முடியும். தொல்லியில் துறையில் அரசியல்வாதிகள் ஏதும் முடிவு செய்ய முடியாது. இதில் தொல்லியல் நிபுணர்கள் தான் முடிவு செய்ய முடியும். இது அவர்களின் வேலை. இவ்வாறு அவர் கூறினார்.