ADDED : நவ 07, 2025 11:57 PM
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன தொழிலாளர்களுக்கு, லாலிக்கல் அருகே விடுதி கட்ட, 2020ல், அ.தி.மு.க., ஆட்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு சொந்தமான, 120 ஏக்கர் நிலம் கெலமங்கலம் ஒன்றியக்குழு தீர்மானம் இன்றி, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு மாவட்ட நிர்வாகம் வழங்கியது.
ஒரு ஏக்கர் சில லட்சங்கள் என்ற அடிப்படையில், 99 ஆண்டுக்கு டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இங்கு தற்போது ஒரு ஏக்கர் சந்தை மதிப்பு, 10 கோடி ரூபாய். இந்த இடத்தை சுற்றி, தனியார் நிறுவனத்திடம் இருந்த, 950 ஏக்கர் நிலம், அருகில் உள்ள கிராமங்களை சுற்றி, 1,000 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை டாடா நிறுவனம் வாங்கி, இரண்டாவது யூனிட்டை துவங்கியுள்ளது.
இந்த நிலம் வாங்குவதில் இருந்த பிரச்னையை, தி.மு.க., அரசு தீர்த்து வைத்துள்ளது. இதற்கு தி.மு.க.,விற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தான், டாடா நிறுவனம், பல கோடி ரூபாய் சொந்த பணத்தை செலவு செய்து கட்டிய பணியாளர் விடுதிக்கு, ஒளிரும் சூரியனுடன் கூடிய லோகோவுடன், 'விடியல் ரெசிடென்சி' என, பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

