ரயில் திட்டப் பணிகளை துரிதப்படுத்த தமிழகத்தில் தனி நிறுவனம் துவங்கப்படுமா?
ரயில் திட்டப் பணிகளை துரிதப்படுத்த தமிழகத்தில் தனி நிறுவனம் துவங்கப்படுமா?
ADDED : ஜூன் 18, 2025 11:17 PM
சென்னை:ரயில்வேயுடன் இணைந்து, தமிழக ரயில்வே திட்ட பணிகளை விரைந்து முடிக்க, தனி உள்கட்டமைப்பு நிறுவனம் அமைக்கும்படி, தலைமை செயலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தெற்கு ரயில்வே சார்பில், திண்டிவனம் - திருவண்ணாமலை, அத்திப்பட்டு - புத்துார், மொரப்பூர் - தர்மபுரி, தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை உட்பட, 10 புதிய பாதை திட்டங்கள், 14,669 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகின்றன. இதில், 24 கி.மீ., துாரம் பணிகள், 1,223 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், 967 கி.மீ., துாரத்துக்கு, ஒன்பது வழித்தடங்களில் அகலப்பாதை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், 37 கி.மீ., துாரம் பணிகள் முடிந்துள்ள நிலையில், நிலம் கையகப்படுத்துவதில் தாமதம், போதிய நிதி ஒதுக்காத காரணங்களால், மீதி பணிகள் மெத்தனமாக நடக்கின்றன.
எனவே, தமிழக ரயில்வே திட்டங்களுக்கான பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், பணிகளை விரைந்து முடிக்கவும், மற்ற மாநிலங்களை போல், தமிழகத்திலும் ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ரயில்வே திட்ட ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன், ரயில்வே மண்டல பயணியர் கவுன்சில் முன்னாள் உறுப்பினர் பாண்டியராஜா, பொதுநலச் சங்க பொருளாளர் ராமன் உள்ளிட்டடோர், சென்னையில் நேற்று முன்தினம், தமிழக அரசின் தலைமை செயலரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து, தயானந்த் கிருஷ்ணன், பாண்டியராஜா ஆகியோர் கூறியதாவது:
தமிழகத்தில் அகல ரயில் பாதை திட்டங்கள் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளன. நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல், போதிய நிதி ஒதுக்காதது உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக உள்ளன. எனவே, மஹாராஷ்டிரா, குஜராத், கேரளா மாநிலங்களில் இருப்பதுபோல், தமிழகத்திலும் ரயில்வே உள்கட்டமைப்புக்கு என, தனி நிறுவனம் துவங்க, தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
ரயில்வேயுடன் இணைந்து, இந்நிறுவனம் செயல்படும் என்பதால், ரயில் திட்டப் பணிகள் துரிதமாக நடக்க வாய்ப்பு கிடைக்கும். ஆய்வு செய்து, முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

