UPDATED : நவ 04, 2026 10:53 AM
ADDED : நவ 04, 2026 10:49 AM
-–நமது நிருபர்–: ஒருங்கிணைந்த சேவை மையங்களில் (ஒன் ஸ்டாப் சென்டர்) பணிபுரியும் ஊழியர்களுக்கு, தீபாவளிக்கு முன்பாக நிலுவை சம்பளம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒன் ஸ்டாப் திட்டம், மாநில சமூக நலத்துறையின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
மக்கள் தொகைக்கு ஏற்ப மாவட்டங்களில் இரண்டு முதல் நான்கு மையங்கள் வரை செயல்படுகின்றன. ஒவ்வொரு மையத்திலும் கேஸ் ஒர்க்கர் உள்ளிட்ட 13 பேர் பணிபுரிகின்றனர். மாநிலம் முழுவதும் 1,678க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
குடும்பம், பணியிடம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு உடனடி உதவிகள், இந்த மையங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. பெண்களுக்கான உதவி எண்ணுக்கு வரும் அழைப்புகளைக் கையாளும் பணியிலும் இம்மைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், ‘தீபாவளி நெருங்கும் நிலையில், குடும்பச் செலவுகளைசமாளிக்க முடியாமல் சிரமப்படுகிறோம். நிலுவையில் உள்ள சம்பளத்தை தீபாவளிக்கு முன்பாக வழங்கினால் உதவியாக இருக்கும்.
தொடர்ந்து சம்பளப் பிரச்னை நீடிப்பதால், சிலர் வேறு துறைகளுக்கு மாறுவதற்கும் விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளனர்,’ என்றனர்.
