'ஹைப்பர் இன்சுலினிசம்' நோய்க்கு மருந்து அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுமா?
'ஹைப்பர் இன்சுலினிசம்' நோய்க்கு மருந்து அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுமா?
ADDED : ஜூலை 23, 2025 12:00 AM

கோவை:குழந்தைகளை பாதிக்கும், 'கன்ஜெனிட்டல் ஹைப்பர் இன்சுலினிசம்' என்ற நோய்க்கான மருந்தை, அரசு மருத்துவமனைகளில் வழங்க கோரிக்கை எழுந்து உள்ளது.
மரபணு குறைபாட்டால், குழந்தைகளை பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இவ்வரிசையில், கன்ஜெனிட்டல் ஹைப்பர் இன்சுலினிசம் என்ற நோயும் குழந்தை களைபாதிக்கிறது.
சர்க்கரை நோய் இந்நோய் பாதித்தவர்களுக்கு, இன்சுலின் அதிகளவு உற்பத்தியாகி, சர்க்கரை அளவு குறைந்து, அடிக்கடி வலிப்பு ஏற்படுகிறது. இது தொடரும் போது, பாதிப்புக்கு உள்ளானவர்கள் உயிரிழக்கவும் நேரிடும்.
இந்நோய்க்கான மருந்தின் விலை அதிகம் என்பதால், அரசு மருத்துவமனைகளில் வழங்க கோரிக்கை வலுத்துள்ளது.
சர்க்கரை நோயியல் நிபுணர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் கூறியதாவது:
இது, குழந்தைகளை பாதிக்கும் டைப் 1 சர்க்கரை நோய்க்கு, நேர் எதிரான நிலையை கொண்டது. சர்க்கரை நோயில் இன்சுலின் உற்பத்தி அளவு குறைவாக இருக்கும். அதனால், சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
ஆனால், இந்நோய் பாதித்த குழந்தைகளுக்கு, ரத்தத்தில் தேவைக்கு அதிக மாக இன்சுலின் சுரக்கும். கணையத்தில் சிறிய அளவிலான வீக்கங்கள் ஏற்படும்.
ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பதால், சர்க்கரை அளவு குறைந்து விடும்.
அதாவது சர்க்கரை அளவு, 70க்கு கீழ் சென்று, வலிப்பு அல்லது, 'கோமா'வுக்கு அழைத்துச் செல்லும். இதனால், நிரந்தர மூளை பாதிப்பு ஏற்படலாம். இது, மிகவும் அரிதான நோய். இதை தடுக்க, 'டையசாக்சைடு ' என்ற மாத்திரை உள்ளது.
இம்மாத்திரை இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்தி, சக்கரை அளவு குறையாமல் தடுக்கும். பிறந்து ஓரிரு வாரத்துக்குள், இந்நோய் வரத்துவங்கி விடும். இம்மாத்திரையை வாழ்நாள் முழுதும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
விலை அதிகம் மாத்திரையை எடுக்கவில்லை எனில், இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை வலிப்பு ஏற்படும். டைப் 1 சர்க்கரை நோய்க்கு இணையான பாதிப்பை, இந்நோய் கொண்டது. இம்மாத்திரையின் விலை அதிகம்.
மாதத்து க்கு, 25,000 முதல் 30,000 ரூபாய் வரை செலவாகும். இப்பாதிப்பு உள்ள அனைத்து குழந்தைகளும், ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களே.
ஆகவே, இம்மாத்திரையை அரசு மருத்துவமனைகளில் வழங்க வேண்டும். இம்மாத்திரை கொடுக்கவில்லை எனில், அவர்கள் உயிரிழக்கவும் நேரிடும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.