பொங்கல் பண்டிகைக்கு தனியார் பஸ்கள் அனைத்து மாவட்டத்திலும் இயக்கப்படுமா?
பொங்கல் பண்டிகைக்கு தனியார் பஸ்கள் அனைத்து மாவட்டத்திலும் இயக்கப்படுமா?
ADDED : அக் 31, 2025 10:25 PM
சென்னை:'பொங்கல் பண்டிகையின் போது, ப யணியர் சிரமம் இல்லாமல் தங்கள் ஊருக்கு செல்ல வசதியாக, அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பஸ்களை, போக்குவரத்து துறை ஒப்பந்தம் செய்து இயக்க வேண்டும்' என, தனியார் பஸ் உரிமையாளர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் தேவைக்கேற்ப தனியார் பஸ்களை இயக்க, தமிழக அரசின் போக்குவரத்து துறை ஒப்பந்தம் செய்து வருகிறது.
ஒப்பந்தம்
கடந்த தீபாவளியின் போது, சென்னையில் இருந்து விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சிக்கும்; மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம், கரூர் மற்றும் தேனி மாவட்டங்களுக்கு இடையேயும், ஒப்பந்த அடிப் படையில் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.
இதற்கிடையே, வரும் பொங்கல் பண்டிகையின் போது, தேவை அதிகரிக்கும் என்பதால், அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பஸ்களை ஒப்பந்தம் செய்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தனியார் பஸ் உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையா ளர்கள் சம்மேளன செயலர் தர்மராஜ் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தேவைப்படும் போது, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
காத்திருப்பு குறைவு
கடந்த தீபாவளி பண்டிகையின் போது, தமிழகம் முழுதும், 500க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், பஸ்கள் இல்லாமல், பயணியர் காத்திருப்பது வெகுவாக குறைந்துள்ளது.
வரும் பொங்கல் பண்டிகையின் போது, மக்கள் அதிகளவில் சொந்த ஊருக்குச் செல்வர்.
எனவே, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேவைக்கு ஏற்ப தனியார் பஸ்களை இயக்கும் வகையில், அரசு போக்கு வரத்து கழகங்கள் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

