மாநில சட்டம் - -ஒழுங்கு பாதுகாப்பு மத்திய அரசிடம் தாரைவார்ப்பா? தி.மு.க.,வுக்கு அன்புமணி கேள்வி
மாநில சட்டம் - -ஒழுங்கு பாதுகாப்பு மத்திய அரசிடம் தாரைவார்ப்பா? தி.மு.க.,வுக்கு அன்புமணி கேள்வி
ADDED : அக் 04, 2024 12:09 AM
சென்னை:'நாடெங்கும் மதுவிலக்கு சட்டம் கொண்டு வர வேண்டும் எனக்கூறும் தி.மு.க., சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பை, மத்திய அரசிடம் தாரைவார்த்து விடுமா' என்று, பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுவிலக்கு
அவரது அறிக்கை:
'நாடெங்கும் மதுவிலக்கு சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே, தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமாகும்' என்று, மது ஆலை அதிபர்களின் சங்க செய்தி தொடர்பாளர் போல, சட்ட அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார்.
மதுவிலக்கு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு, குடிகாரர்களை விட அதிக தள்ளாட்டத்தில் உள்ளது.
'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், முதல் நாள் முதல் கையெழுத்து மதுவிலக்கு' என்று கடந்த 2016ல், இன்றைய முதல்வர் ஸ்டாலின் முழங்கினார்.
கடந்த 2021ல் ஆட்சிக்கு வந்ததும், டில்லியில் பேட்டி அளிக்கும் போது, 'தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்' என்றார்.
இப்போது, அதற்கு முற்றிலும் எதிராக அமைச்சர் ரகுபதி பேசுகிறார். அப்படியானால், தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலினா, ரகுபதியா?
மதுவிலக்கும், சட்டம் - ஒழுங்கும் மாநில அரசின் அதிகாரங்கள். அதனால், மதுவிலக்கை மாநில அரசுகள் தான் செயல்படுத்த வேண்டும். கள்ளச்சாராயத்தை தடுப்பது உள்ளிட்ட மாநிலத்தின் சட்டம் - -ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பை, திராவிட மாடல் அரசு மத்திய அரசிடம் தாரை வார்த்து விடுமா?
தோல்வி
திராவிட மாடல் அரசுக்கு மக்கள் நலனில் உண்மையாகவே அக்கறை இருந்தால், மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையெனில், தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.