ADDED : நவ 20, 2024 02:48 AM
சென்னை:கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 70க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுக்களின் மீது, சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 70க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள், நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அ.தி.மு.க., நிர்வாகி இன்பதுரை சார்பில், மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி; பா.ம.க., பாலு சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா; பா.ஜ., வழக்கறிஞர் மோகன்தாஸ் சார்பில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மற்றும் வழக்கறிஞர் மணி உள்ளிட்டோர் வாதாடினர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதாடினார்.
இரு தரப்பிலும், கடந்த செப்டம்பர் 19ல் வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிந்த நிலையில், தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில், இன்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்கின்றனர்.