இன்று பத்திரப்பதிவு நடக்குமா? பதிவுத்துறை மவுனம்; மக்கள் குழப்பம்
இன்று பத்திரப்பதிவு நடக்குமா? பதிவுத்துறை மவுனம்; மக்கள் குழப்பம்
ADDED : ஏப் 14, 2025 05:02 AM

சென்னை : தமிழ் புத்தாண்டு தினமான இன்று, சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுவது தொடர்பாக, எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதனால், இன்று சொத்துக்களை பதிவு செய்ய முடிவு செய்திருந்தோர் குழப்பம் அடைந்துள்ளனர்.
அமாவாசை மற்றும் சுபமுகூர்த்த நாட்களில், பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். குறிப்பாக, சித்திரை மாதத்தின் முதல் நாளான தமிழ் புத்தாண்டு, தைப்பூசம், ஆடிப்பெருக்கு போன்ற நாட்களில், பத்திரப்பதிவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
காத்திருப்பு
இதில், தைப்பூசம், தமிழ் புத்தாண்டு நாட்கள், அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சித்திரை முதல் நாள், தைப்பூசம், ஆடிப்பெருக்கு போன்ற நாட்களில், அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களும் வழக்கம் போல செயல்படும் என, 2021ல் தமிழக அரசு உத்தரவிட்டது. அரசு விடுமுறை என்றாலும், இந்த நாட்களில் பத்திரப்பதிவு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
அந்த வகையில், தைப்பூசத்தின் போது, பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படும் என, அதற்கான முன்னறிவிப்பை பதிவுத்துறை வெளியிட்டது. அதன்படி, சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டன.
இன்று சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்பதால், பத்திரப்பதிவு செய்ய மக்கள் காத்திருக்கின்றனர். ஆனால், சார் - பதிவாளர் அலுவலகங்கள் திறப்பு தொடர்பாக, பதிவுத்துறை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
எனவே, இன்று பத்திரப்பதிவு நடக்குமா, நடக்காதா என்று தெரியாமல், மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். சொத்து பத்திரங்கள் மட்டுமின்றி, திருமணப்பதிவு செய்யவும் பலர் காத்திருக்கின்றனர்.
வாய்ப்பில்லை
இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, 'ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணை அடிப்படையில், இன்று பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டும். 'ஆனால், அதற்கான முன்னறிவிப்பு, ஐ.ஜி.,யிடம் இருந்து வரவில்லை. எனவே, அலுவலகம் திறக்கப்பட வாய்ப்பில்லை' என்றனர். இதுதொடர்பாக விளக்கம் கேட்டு, ஐ.ஜி.,க்கு குறுஞ்செய்தி அனுப்பியதற்கு, அவர் எந்த பதிலும் அனுப்பவில்லை.